* 35 உயர்மட்ட கோபுரங்கள்
*சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்
மதுரை : மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 200 இடங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மேலும் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்குதல் போன்ற முக்கிய விழா நாட்களில் ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன், சுவாமி காலை, மாலை நேரங்களில் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதன்படி இன்று (மே 6) பட்டாபிஷேகம், நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை திக்விஜயம், மே 8ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, வடக்கு ஆடி, மேற்கு ஆடி வீதிகளில் பிரம்மாண்டமான செயற்கை பூப்பந்துகளால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மே 8ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59க்குள் கோயிலில் வடமேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மேடையில் நடக்கிறது. இதனை 20 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு வசதியாக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் மற்றும் மண மேடை பகுதிகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூடுவார்கள். இதனால் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உள்ளூர், வெளி மாவட்ட போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
இதற்கிடையே சித்திரை மற்றும் மாசி வீதிகளில் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதனை கண்காணிக்க தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ம் தேதி நடக்கிறது. மதுரை கோரிப்பாளையம் ஏவி மேம்பாலம் அருகே அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அங்கு பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அழகர் கோயில் முதல் வண்டியூர் வரை கள்ளழகர் சென்று திரும்பும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நாளை மறுநாள் (மே 8) சித்திரை திருவிழா தொடங்குகிறது. இதை தொடர்ந்து மே 10ம் தேதி வைகை ஆற்றில் இறங்க கள்ளழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார். இதில் அழகர்கோயில் முதல் கடச்சனேந்தல் வரை சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்கள் அகற்றுதல், சிறுபாலங்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
அடுத்தகட்டமாக தற்போது காதக்கிணறு, கடச்சனேந்தல், சூர்யாநகர், சர்வேயர் காலனி, மூன்றுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள உள்ளார். இதனால் அவர் செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சார்பில் சாலையின் இருபுறம் உள்ள மண் திட்டுக்கள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே மாசி வீதிகளில் அம்மன் மற்றும் சுவாமியின் வீதியுலா நிகழ்வு தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெற்று வருகிறது. இதனால், கோயில் நிர்வாகம் சார்பில் மாசி வீதிகளில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு…
மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பக்தர்கள் அதிகமாக கூடுவது வழக்கம். இதனால் கண்காணிப்பு காமிராக்களுடன், கூடுதலாக ட்ரோன் காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டமிட்டு இருக்கின்றனர். இதன்படி எந்த இடங்களில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற வேண்டும் என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இணையத்தில் டிக்கெட்…
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக இந்து அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in- ஆகியவற்றின் வாயிலாக டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. இதன்படி ரூ.500 மற்றும் ரூ.200 என்ற இருவேறு கட்டணங்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
The post மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 200 சிசிடிவி காமிராக்கள் அமைப்பு appeared first on Dinakaran.