வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்; உரிமையாளரின் பைக்கை எரித்ததால் 5 வாகனம் எரிந்து எலும்புக்கூடானது: முதியவர் கைது

3 weeks ago 7

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் கால்வாய் சாலை முதல் சந்து பகுதியை சேர்ந்தவர் வினோத்(44). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடராஜ் (60) என்பவர் மனைவி சாந்தியுடன் வசித்துள்ளார். இவர்கள் 6 லட்ச ரூபாய் கொடுத்து லீசுக்கு இருந்துள்ளதாக தெரிகிறது. கடந்தாண்டு சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த நடராஜ் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார்.

இதன்காரணமாக வீட்டு உரிமையாளர் கண்டித்ததுடன் இனிமேல் நீங்கள் இங்கு வசிக்கக்கூடாது. வீட்டை காலி செய்துவிடுங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த நடராஜ் மீண்டும் மது அருந்திவிட்டுவந்து உரிமையாளரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதன்பிறகு அவரை உரிமையாளர் வினோத் கண்டித்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். இதன்பிறகு அதிகாலை 2 மணி அளவில் எழுந்துவந்த நடராஜ், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வினோத்துக்கு சொந்தமான பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார். இதில் அவரது பைக்குகள் உள்பட 5 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது.

இதனிடையே அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் பரவியதால் மக்கள் வந்துபார்த்துவிட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். கீழ்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.‌ இதில் 5 வாகனங்கள் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.இதுகுறித்து வினோத் மற்றும் சதீஷ்(35) ஆகியோர் கொடுத்த புகாரின்படி, டி.பி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போது நடராஜ் கூறுகையில், 6 லட்ச ரூபாய் கொடுத்து லீசுக்கு குடியிருந்து வந்தேன்.

எனது மனைவி இறந்ததால் மது பழக்கத்துக்கு அடிமையானேன். இதனால் வீட்டின் உரிமையாளர் வினோத் என்னை காலி செய்யும்படி தினமும் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய போது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளும் எரிந்துவிட்டது என்றார். இதையடுத்து நடராஜ் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்; உரிமையாளரின் பைக்கை எரித்ததால் 5 வாகனம் எரிந்து எலும்புக்கூடானது: முதியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article