தாம்பரம் மாநகராட்சியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

3 hours ago 2

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்களும், 70 வார்டுகளும் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலை, சண்முகம் சாலை, தாம்பரம் – திருநீர்மலை சாலை, தர்காஸ் சாலை, முல்லை நகர் பகுதி, தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலை, சிடிஓ காலனி, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை, கக்கன் தெரு, கோவிந்தராஜ் தெரு, காந்தி சாலை, முத்துரங்க முதலி தெரு, அம்பாள் நகர், கன்னடபாளையம், லட்சுமி நகர், பழைய பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, கணபதிபுரம், ஐஏஎப் சாலை, சேலையூர், கேம்ப் ரோடு, சேலையூர் – அகரம் தென் பிரதான சாலை, சிட்லபாக்கம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், திருமலை நகர், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், நாகல்கேணி சாலை, திருநீர்மலை போன்ற பகுதிகளில் தெருக்கள் மற்றும் சாலைகளில் தினமும் ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே ஆங்காங்கே மாடுகள் படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் மாடுகளாலும், சாலையில் ஆங்காங்கே படுத்து கிடக்கும் மாடுகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைவது மட்டுமின்றி, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த தாம்பரம் மாநகராட்சி சார்பில் அவ்வப்போது ஆய்வு நடத்தி, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அந்த நடவடிக்கை முழுமையானதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலையில் திரியும் மாடுகள் குறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தால், கடமைக்கு சில மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ₹2000 அபராதம் விதிக்கிறார்கள். பிடிபடும் மாடுகளை காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமங்களம் ஊராட்சி மாட்டுக் கொட்டகையில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர், மாடுகளின் உரிமையாளர்கள் நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப் பெற்று சமர்ப்பித்தால் மாடுகளை விட்டு விடுகிறார்கள்.

இந்த கையெழுத்து போடுவதற்கு நகர் நல அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பணம் ெபற்றுக்கொண்டு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு தாராளமாக கையெழுத்துட்டு பரிந்துரை கடிதத்தை வழங்கி விடுவதாகவும், இதனால் மீண்டும் மாடுகளின் உரிமையாளர்கள் வழக்கம் போல மாடுகளை சாலைகளில் விட்டு விடுகிறார்கள் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபோன்று மாடுகளின் உரிமையாளர்கள் மீண்டும் மாடுகளை சாலைகளில் விடுவதால் தான் அனைவருக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாடுகளின் உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகள் பிடிக்கப்பட்டு ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் அதே உரிமையாளரின் மாடுகள் பிடிக்கப்படும் போது, மீண்டும் அவர்களுக்கு ஒப்படைக்க கூடாது. அதுமட்டுமின்றி அபராத தொகையை அதிகம் வசூலித்தால் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் மாடுகளை சாலையில் விடக்கூடாது என்ற அச்சம் ஏற்படும்.

ஏற்கனவே தாம்பரம் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது போல் தேதி வாரியாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி, சாலையில் சுற்றி திரியும் அனைத்து மாடுகளையும் பிடித்து செல்ல வேண்டும். இதுபோன்று மாநகராட்சி சார்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மாடுகளை சாலையில் அதன் உரிமையாளர்கள் விட மாட்டார்கள். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறும் ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article