சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மற்றும் 8வது வார்டுகளில் உள்ள அரியப்பம்பாளையம் காலனியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஒரு சில வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களின் மகன் மற்றும் மகள் திருமணமான நிலையில் ஒரே வீட்டில் இட நெருக்கடியில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி வருவாய் துறையினரிடம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து வீட்டு மனைப்பட்டா வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று அரியப்பம்பாளையம் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள வணிகவரி அலுவலகத்தின் அருகே புறம்போக்கு காலி இடத்தில் குடிசை அமைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் மற்றும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு குடிசை அமைத்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாத காரணத்தினால் வீட்டு மனைப்பட்டா வேண்டி புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்ததாக தெரிவித்தனர். குடிசை அமைத்த பகுதி அனாதீன புறம்போக்கு என்ற வகைப்பாட்டை சேர்ந்ததால் அந்த இடத்தில் பட்டா வழங்க இயலாது எனவும், தகுதியான நபர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சொந்த வீடு இல்லாத பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி 71 மனுக்களை வருவாய்த்துறையினரிடம் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் எனவும், தற்போது ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள குடிசைகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து குடிசைகள் அகற்றப்பட்டது.
The post வீட்டுமனைப்பட்டா கேட்டு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்த பொதுமக்கள்: வருவாய்த்துறை அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.