
புதுடெல்லி,
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றுபவர் யஷ்வந்த் வர்மா. இவர் டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றியபோது அவரது வீட்டில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கச் சென்றபோது நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றில் பல நோட்டுகள் தீயில் கருகிவிட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார். இதனிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஆமதாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பாக விசாரணை நடத்திய 3 நீதிபதிகள் குழு, கடந்த 3-ந்தேதி தங்களது அறிக்கை மற்றும் நீதிபதியின் விளக்கக் கடிதம் ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கை அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அனுப்பி வைத்தார். 3 நீதிபதிகள் விசாரணையில், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே சுப்ரீம் ேகார்ட்டு நீதிபதி மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.