
சென்னை,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது; சென்னையில் இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடைபெறுகிறது. என தெரிவித்தார்.