வீடுகளில் 25 சவரன் கொள்ளை 2 சிறைக்காவலர்கள் கைது

3 weeks ago 3

நெமிலி: நெமிலியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு 25 சவரன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வேலூர் மத்திய சிறைக்காவலர்கள் 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(73). ஓய்வு பெற்ற விஏஓ. மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன்ராஜ் டிசம்பர் மாத துவக்கத்தில் கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை சென்று, உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் 4ம் தேதி காலை மோகன்ராஜின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அவரை தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்து கிடப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மோகன்ராஜ், வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ஒன்னேகால் கிலோ வெள்ளி நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் கற்பகாம்பாள் நகரை சேர்ந்த வெங்காய வியாபாரி சுரேஷ்(44). என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 சவரன் நகைள், 416 கிராம் வெள்ளி நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடிவந்தனர். இச்சம்பவங்களை தொடர்ந்து பனப்பாக்கம், சேந்தமங்கலம், பருவமேடு, பள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டை எஸ்பி கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில், நெமிலி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்ஐ லோகேஷ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக போலீசார் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் மேற்கண்ட 2 வழக்குகள் தொடர்பாக குற்றவாளி ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூரை சேர்ந்த சூர்யா(29) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஓய்வு பெற்ற விஏஓ, வியாபாரி வீடுகளில் திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை, ஏற்கனவே குற்றச்சம்பவங்களில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருந்த போது, நண்பர்களான சிறைக்காவலர்கள் பாஸ்கரன்(29), அப்துல்சலாம்(28) ஆகியோரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து சிறைக்காவலர்கள் பாஸ்கரன், அப்துல்சலாமை பிடித்து நெமிலி போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஏற்கனவே சிறை நிர்வாகத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் சூர்யா கொடுத்து வைத்த நகைகளை திருவண்ணாமலையில் விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து விஏஓ வீட்டில் திருடப்பட்ட 15 சவரன் நகைகள், ஒன்னேகால் கிலோ வெள்ளி நகைகள், வியாபாரி வீட்டில் திருடிய 11 சவரன் நகைகள், 416 கிராம் வெள்ளி நகைகளில் 13.7 சவரன் தங்க நகைகளும், 1.666 கிலோ வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டன. விற்பனை செய்யப்பட்ட மீதி தங்க நகைகளின் பணத்தில் செலவிட்டது போக கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீடுகளில் 25 சவரன் கொள்ளை 2 சிறைக்காவலர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article