வீகன் தயாரிப்புகளுக்கு இப்போ மவுசு அதிகம்!

2 weeks ago 5

பேக்கரி பொருட்கள் என்றாலே முட்டையே ப்ரதானம் என்கிற எண்ணத்தை தவிடுபொடியாக்கி விதவிதமான வீகன் வகை பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை தற்போது கொடிகட்டி பறந்து வருகிறது. முட்டை சேர்க்காத கேக், வீகன் கேக், அதிலும் குறிப்பாக கஸ்டமைஸ்டாக தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்களுக்கான வரவேற்புகள் மிகமிக அதிகமாக இருக்கிறது. வீட்டிலேயே சிறிய யூனிட் வைத்து வீகன் வகை பொருட்களை தயாரித்து அளித்து வருகிறார்கள் ஹோம்பேக்கர்கள். சாதாரண வகை கேக்குகள் போல் அல்லாமல் தீம் கேக்குகள், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டங்களுக்கான சிறப்பு கேக்குகள், வீகன் வகை குக்கீஸ்கள், ப்ரௌனி, சாக்லேட், நட்ஸ் கேக்குகள், பிரஞ்சு மக்ரூன்ஸ் என கலக்கி வருகிறார்கள் ஹோம் பேக்கர்ஸ். அதில் தனித்தன்மையுடன் பிரத்யேகமாக வீகன் கேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியம். இவர் வீகன் பேக்கரி பொருட்களுக்கான தற்போதைய தேவைகள் அதன் தனிச்சிறப்புகள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

வீகன் கேக்குகளின் தனிச்சிறப்பு என்ன?

பால் சார்ந்த பொருட்கள் உதாரணமாக பட்டர் , சீஸ், தயிர் போன்றவைகளை பயன்படுத்தாமல் அனிமல் ப்ராடக்டுகள் என எதையும் பயன்படுத்தாமல் செய்து தருவதே வீகன் பொருட்கள். முட்டையில்லாத கேக்குகளும் வீகன் கேக்குகளும் ஒன்று என பலர் நினைத்து உள்ளனர். இவை இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த வகை கேக்குகள் மற்றும் குக்கீஸ்களை பால் சார்ந்த பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்களும், வீகன் உணவாளர்களும் தாராளமாக பயன்படுத்தலாம்.

பட்டர்சீஸ் இல்லாமல் கேக் தயாரிக்க முடியுமா?

வீகன் கேக் மற்றும் குக்கீஸ்களுக்கும் பட்டர் சீஸ் தயிர் போன்றவற்றை பயன் படுத்துவோம். ஆனால் அது சாதாரண மாட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப் படுபவை அல்ல. தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் பால்கள், சோயாபால், முந்திரி மற்றும் பாதாம்களில் இருந்து எடுக்கப் படும் பால் மூலமாக சீஸ் , வெண்ணெய், தயிர் போன்றவற்றைத் தயாரித்து பயன்படுத்தி செய்வதே வீகன் கேக்குகள். இந்த வகை கேக்குகளில் பயன்படுத்தப்படும் கிரீம் வகைகளும் வீகன் பொருட்களால் செய்யப்பட்டவையே… வெண்ணெய் க்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்யும் கேக்குகளும் சுவையாகவே இருக்கும்.

வீகன் பொருட்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

பொதுவாக வீகன் பொருட்களுக்கான வரவேற்பு வெளிநாடுகளில் மட்டுமே அதிகமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளில் பால்பொருட்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கான ஒவ்வாமை என்கிற அலர்ஜி நிறைய பேருக்கு இருக்கும். அவர்களிடையே வீகன் பொருட்களுக்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. சமீப காலங்களில் இந்தியாவிலும் நிறைய பேருக்கு பால் சார்ந்த பொருட்களுக்கான அலர்ஜி இருப்பதை காண்கிறேன். அதனால் வீகன் பொருட்களுக்கான தேவைகள் இங்குமே அதிகமாக இருக்கிறது. மேலும் சித்த மருத்துவம் எடுத்துக்கொள்கிற சிலரும் பால் பயன்படுத்தாமல் தவிர்க்கிறார்கள். அவர்களும் எங்களிடம் ஆர்வமாக வீகன் கேக்குகள் மற்றும் குக்கீஸ்களை அதிகமாக வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அசைவம் உணவுப் பழக்கம் இருப்பவர்களும் இத்தகைய பொருட்களுக்கான வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். தற்போது இந்தியா போன்ற நாடுகளிலும் வீகன் பொருட்களுக்கான வரவேற்பு என்பது அதிகமாக இருக்கிறது.

உங்கள் பொருட்களுக்கான தனிச்சிறப்பு என எதை சொல்கிறீர்கள்?

நான் செயற்கை கலர்களையோ பொருட்களையோ பயன்படுத்தாமல் அவ்வப்போது கிடைக்கும் சீஸன் பழ வகைகளை வைத்து மட்டுமே கேக்குகளை தயாரித்து தருகிறேன். எசன்ஸ்களை பயன்படுத்தி தயாரிப்பதை அறவே தவிர்த்து வருகிறேன். என்னுடைய கேக்குகளில் பொதுவாகவே இனிப்புத் தன்மை அதிகமாக இல்லாமல் அந்தந்த கேக்குகளின் ப்ளேவர் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். மைதாவை பயன்படுத்தாமல் கோதுமை, கேழ்வரகு மற்றும் சிறுதானிய மாவுகளில் செய்து தருகிறேன். அதே போன்று கொக்கோ பட்டர், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் பயன்படுத்தி ஹெல்தியாக செய்கிறேன். தாவர வகைகளில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து மட்டுமே தயாரித்து தருவதே வீகன் பொருட்களின் சிறப்பு எனலாம். டைரி பொருட்கள் குறித்த அலர்ஜி இருப்பவர்களும் வீகன் கேக்குகளை தாராளமாக சாப்பிடலாம். வீகன் பிரட் மற்றும் டோனட் போன்றவற்றையும் நிறைய பேர் விரும்பி வாங்குகிறார்கள்.

உங்கள் வாடிக்கையாளர்கள் சேவை குறித்து?

எங்களது கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பினை பொறுத்தமட்டில் நிறைய கிரியேட்டிவிட்டி மற்றும் ஐடியாக்கள் தேவை. இவை சிறப்பாக அமைந்தாலே வாடிக்கையாளர்களிடையே நமது தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். கேக் தயாரிப்பை போலவே பேக்கிங் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சேர்ப்பது போன்ற வாடிக்கையாளர்கள் சேவைகளும் விற்பனை வாய்ப்பினை பெற்றுத் தரும். அதே போன்று தயாரித்த சில மணி நேரத்தில் ப்ரஷ்ஷாக அனுப்பி வைப்பதும் முக்கியமான ஒன்று. தற்போது பேஸ்புக், வாட்சப் இன்டாகிராம் மூலமாக எங்கள் தயாரிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்க சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலமாக எங்கேயோ இருக்கும் வாடிக்கையாளர்களும் எங்கள் தயாரிப்புகளை அதன் சிறப்புகளை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகில் எங்களது தயாரிப்புகளை உடனே டெலிவரி செய்ய நிறைய டெலிவரி ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது.

விற்பனையை அதிகரிப்பதற்கான எதிர்கால ஐடியாக்கள் குறித்து?

தற்போதைய சூழலில் வீதிக்குவீதி நிறைய பேக்கரிகள் இருந்தாலும் வீகன் பொருட்களுக்கான பேக்கரி என தனியாக ஏதும் கிடையாது. இதன் காரணமாக எனக்கு முழுக்க முழுக்க வீகன் தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யும் கடையை அமைக்க வேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கிறது. அதற்கான நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதே போன்று வீகன் தயாரிப்புகளை சொல்லித் தர ஒரு பேக்கரி ஸ்கூல் அமைக்க வேண்டும் என்பதுமே எனது அதீத ஆசை. நான் தேடித்தேடி கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும் எனது எண்ணங்களாக இருந்துவருகிறது.

பேக்கரி தொழில் செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

பேக்கரி தொழில் மட்டுமல்ல எந்த தொழிலாக இருந்தாலும் முறையான பயிற்சியுடன் தொழிலை தொடங்குங்கள். அதில் உங்கள் கற்பனைத் திறனை சிறப்பாக புகுத்தி தனித்தன்மையுடன் செய்தால் வெற்றி உங்களை தேடி வரும். அதேபோல் எதிர்வரும் தடைக் கற்களை துணிந்து தூளாக்கி வெற்றி காணுங்கள். பொருளாதார பலம் பெறுவதே தொழிலில் தன்னிறைவு காண்பதே ஒரு பெண் வாழ்வில் வெற்றி நடைபோட பெரும் காரணமாக இருக்க முடியும் என
துணிவுடன் சொல்கிறார் ஐஸ்வர்யா.
– தனுஜா ஜெயராமன்.

The post வீகன் தயாரிப்புகளுக்கு இப்போ மவுசு அதிகம்! appeared first on Dinakaran.

Read Entire Article