விஷ்வக்சேனர்

2 hours ago 3

திருமால் வழிபாடு என்பது வைணவத்தைக் குறிக்கும்.ஒரு நாட்டை ஆள எப்படி ஓர் அரசாட்சி தேவையோ, அதுபோல பக்தி மார்க்கங்களில் ஸநாதனமானது வைணவம். அதற்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவே பிரதான தெய்வம்.பக்தி மார்க்கத்துக்குப் பல சமயங்கள் நாடெங்கிலும் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான். எந்தவித மதமானாலும் அடிப்படையானது பக்திதான். எந்தவிதமான மதமானாலும், ஓர் உண்மையானபக்தன் அடுத்த மதத்தைச் சார்ந்த கடவுளையும் அந்த மதத்தின் கோட்பாடுகளையும் மதித்து நடக்க வேண்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு நாட்டின் ராஜாவானவன் தன்னுடைய நாட்டினர் நல்வாழ்வுக்காகப் பல துறைகளை ஏற்படுத்தி, அவர்கள்மூலம் மக்களின் குறைகளைத் தீர்ப்பான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் கண்காணிக்க ஒரு சேனைத் தலைவன் இருப்பான். அதுபோல, அனைத்து உலகையும் பரிபாலிப்பவன் தனக்கும் ஒரு சேனாதிபதியை வைத்துள்ளான்.

பரமபதம் என்ற திருமாலின் இருப்பிடத்தில் இருப்பவர்கள் அனைவரும் ‘நித்யசூரிகள்’ என்று அழைக்கப்படுவர்.அதாவது, பிறப்பு, இறப்பு என்ற நிலையைக் கடந்தவர்கள்.நித்யசூரிகளில் முதன்மையானவர்கள் வரிசையில் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அனந்தனே திருமாலுக்கு
சென்றால் குடையாம் இருந்தால் ஸிம்மாஸனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள்
என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும் அணையாம் திருமாற்கரவு

என்றபடி, திருமாலோடு எப்போதும் சம்பந்தப்பட்டவராய், குறிப்பாக திருமகளுடன் ஏகாந்தத்தில் இருக்கும்போதும் அரவணையாயப்பணி செய்பவன்.அதேபோன்று கருடபகவான், திருமாலுக்கு வாகனமாயும் கொடியாகவும் அமைந்துள்ளார்.திருமால் தன் பக்தர்களைக் காப்பதற்காக எக்காலத்திலும் அவரைஏற்றிச் செல்லத் தயார் நிலையில் இருப்பார்.

விஷ்வக்சேனரோ திருமாலின் சேனைத் தலைவர், படைத்தலைவர் என்பதால் இவரை சேனைநாதன், சேனாதிபதி, சேனை முதலியார் என்றெல்லாம் அழைப்பர். ஒரு செயலைத் தொடங்கும் முன், அது விக்னங்கள் (தடைகள்) இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக சைவமதத்தினர் விநாயகப் பெருமானை முதலில் வணங்கி செயல்களைத்தொடங்குகிறார்கள்அல்லவா?அதுபோல வைணவர்கள் விஷ்வக் சேனரை வணங்கிவிட்டே அனைத்து முயற்சிகளையும் தொடங்குவர்.

ஐப்பசிமாத பூராடநட்சத்திர நன்னாள் ஸ்ரீவிஷ்வக்சேனரின் அவதாரநாளாகக் கொண்டாடப் படுகிறது. இவரை, அனைத்துத் திருமால் திருத்தலங்களிலும் தரிசிக்கலாம். வைணவசீலர் ஸ்வாமி தேசிகன் தன்னுடைய ‘தயாசதகத்தில்’,

அசேஷவிக்நசமநம்
அ நீகேச்வரமாஸ்ரயே
ஸ்ரீமத் கருணாம் போதென
சிஷாஸ்ரோதஇவோத்திதம்

என இவரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, இவரது சேனைகள், பகவானையே நம்பிஅவரிடத்தில் பக்தி செலுத்துபவர்களுக்கு ஏற்படும் விக்னங்களை(தடைகளை) போக்குபவர்கள். எல்லா வைதீக நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முன்பும், வைணவர்கள் இவரையே பூஜிப்பர். ஸ்ரீனிவாசனுடையதயைஎன்ற தடாகத்திலிருந்து அநேகக் கிளைகள் வெளியில் கரைபுரண்டு ஓடுகின்றன. அப்படிப்பட்ட கிளைகளில் ஒன்றான ஞானோபதேசம் என்பதான சிக்ஷையை, உபதேசத்தோடு மட்டுமின்றி, பக்தன் செய்யும் தவறுகளுக்கு உரிமையுடன் தண்டிப்பதையும் தன்மையாகக் கொண்டவர்.ஒரு குழந்தை தவறு செய்தால், அந்தக் குழந்தையைத் தாய் உரிமையுடன் கண்டிப்பது போலாகும்.இல்லையெனில், தவறி நடப்பதேஅவர்களின் சுபாவமாகிவிடும் அல்லவா? விஷ்வக்சேனர், மஹாவிஷ்ணுவின் சேனைத் தலைவராக இருந்து அசுர சம்ஹாரத்தில் திருமாலுக்கு உதவுவது மட்டுமின்றி, பிரதானமந்திரியாக விளங்கி, தன் கைப்பிரம்பின் கீழ் இவ்வுலகத்தை நடத்துகிறார்.

விஷ்வக்சேனர் அமர்ந்த நிலையில், மேல் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் சங்கைத் தாங்கியும், கீழ் வலக்கரம் ஆட்காட்டி விரல் மேல்நோக்கி நீண்டநிலையில் அபய ஹஸ்தமாகவும், இடக் கரத்தால் கதையைத் தாங்கியபடியும் காட்சி தருவார்.சில உருவங்களில் வலதுபுறம் கோல் ஒன்றும் அமைந்திருக்கும்.இவருக்கு ஸுத்ரவதி என்ற மனைவி உள்பட இரண்டு மனைவிகள் உண்டு என்ற தகவலும் உண்டு.

சில திருக்கோயில்களில் நின்ற நிலையிலும் காட்சி தரும் இவர், ராஜமன்னார்குடி ராஜகோபாலன் சந்நதியில் ஸுத்ரவதியான தன் மனைவியுடன், தனிச் சந்நதியில் காட்சி அளிக்கிறார். ஆதிசேஷனில் அமர்ந்த நிலையிலும் இவரைச் சில திருக்கோயில்களில் காணலாம். இவருக்குக் கஜானனன், ஹரிவக்த்ரர், காலப் பிரகிருதி போன்ற பெயர்களும் உண்டு.

விஸ்வக்சேனரின் சேனைத் தலைவர்களான ஜயத்ஸேனன், கலாஹலன், சிம்மமுஹன், கரிமுகன் ஆகியோர்களே ஸ்ரீரங்கத்தை நாற்புறத்திலும் காத்து வருகிறார்கள் என்று கூரத்தாழ்வானின் குமாரர் பராசரபட்டர் குறிப்பிடுகிறார். விஷ்ணு ஆலயங்களுக்குச் செல்லும்போது பெருமானைத் தரிசிக்கும் முன்பாகத் துவாரபாலகர்களான ஜய, விஜயர்களின் அனுமதியுடனும் ஸ்ரீவிஷ்வக்சேனரை மானசீகமாகப் பிரார்த்தனை செய்து கொண்டு செல்வது நன்று. இதுதான் வழக்கம்.

திருமால் திருக்கோயில்களுக்குச் செல்லும்போது துவாரபாலகர்களை வணங்கி விஷ்வக்சேனரை மனதால் தியானித்த பின்பே சந்நதியில் நுழைய வேண்டும். அதேபோன்று வைணவர்கள் பூஜையறையில் ஆராதனை தொடங்கும் முன்பாக வடகிழக்குத் திசையை நோக்கி ‘ஓம் நமோ பகவதே விஷ்வக்சேனாய’ என்று கூறி, பிறகு தெற்கு முகமாக நின்று மீண்டும் ஸுத்ரவதி சமேதரான விஷ்வக்சேனரை மானசீகமாகத் தொழுதபின்பே ஆராதனையைத் தொடங்க வேண்டும். திருக்கோயில்களில் பிரம்மோத்ஸவத்துக்கு முன்பாகச் சேனை முதலியார் உத்ஸவம் என்ற வழிபாடு உண்டு.

வைணவ சம்பிரதாயத்தில் ஆசார்ய ஸ்தானத்தை வகிப்பவரும் இவரே. (பெருமான்/பிராட்டி/விஷ்வக்சேனர்) இவரின் நிலை மூன்றாவது நிலை. ஆழ்வார்ளின் தலைவரான நம்மாழ்வார் இவருடைய அம்சமாக அவதரித்தார். நாம் தொடங்கும் நற்காரியங்கள்அனைத்தும் தடையின்றி நிறைவேற விஷ்வக்சேனரை வழிபடுவோம்.

The post விஷ்வக்சேனர் appeared first on Dinakaran.

Read Entire Article