விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரம்: ஆலைகளை கண்காணிக்க தொழிற்சங்கம் வலியுறுத்தல்

1 day ago 4

திருப்பூர், மே 22: பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறைந்த திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதனை சார்ந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு வண்ணம் ஏற்றுவதற்காக ஏராளமான சாய சலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சாயசலவை ஆலைகளில் வண்ணம் ஏற்றப்பட்ட பிறகு பயன்படுத்தப்படும் நீர் மீண்டும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு சுத்தகரிப்பு செய்து மீண்டும் மறுசுழற்சி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலிருந்து சேகரமாகும் கழிவுகள் கழிவுநீர் தொட்டிகளில் விழுகிறது. அவ்வப்போது இவை சுத்திகரிப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பல நாட்களாக சுத்தகரிப்பு செய்யாத தொட்டிகளில் திடீரென சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படும் போது அதில் உள்ள வாயுக்கள் தாக்கி உடல் உபாதைகள் ஏற்படுவது முதல் உயிர் இழப்பு வரை நிகழ்கிறது.

கரைப்புதூர் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக இதே போல் சாய சலவை ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிப்பு செய்யப்படும் போது வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருப்பூரில் ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில் சாய சலவை ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பரூக் அகமது, அன்வர் உசேன், அபு , தில்வார் உசேன் என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வித்யாலயம் கொத்துக்காடு தோட்டத்தில் உள்ள சாய சலவை ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தகரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடிவேல், தினேஷ் பாண்டி, ராஜேந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய நிலையில் மனித கழிவுகள் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகளை வெறும் கைகளால் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடக்கூடாது என அரசும் சட்டம் இயற்றி கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இது போன்ற சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்ற நிலையில் இதனை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து முழுவதுமாக கண்காணிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இது குறித்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சேர்ந்த சேகர் கூறுகையில், திருப்பூரில் சாய சலவை ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மட்டுமல்லாது கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் சாயசலவை ஆலைகளில் சுத்தகரிப்பு பணியின் போது தொழிலாளர்கள் இறப்பது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இழப்பீடு வழங்குவது, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட தற்காலிக தீர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாது, இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். இவர்கள் திருப்பூரில் உள்ள சாய சலவை ஆலைகளில் கழிவுநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும், அங்குள்ள கழிவுநீர் தொட்டிகள் சுத்தகரிப்பு செய்யப்படும் முன்னதாக கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு உபகரணங்களுடன் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை உறுதி செய்த பின்பு அனுமதி வழங்க வேண்டும்.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இனியும் இது போன்ற உயிரிழப்புகள் நிகழாத வண்ணம் தடுக்க முடியும் என தெரிவித்தனர்.

The post விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரம்: ஆலைகளை கண்காணிக்க தொழிற்சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article