புதுக்கோட்டை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிபிசிஐ போலீசார் மிகச் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு ஆதாரங்களை திரட்டி யார் யாரெல்லாம் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கண்டுபிடித்து அந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூருக்கு தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தற்போதைய நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாக உள்ளது.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை எந்த அரசும் எடுக்காத நடவடிக்கை. சிபிஐ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய நிலைமையை இது போன்ற தீர்ப்புகள் உருவாக்குகின்ற சூழ்நிலை அமைந்து விடுகிறது. ஸ்காட்லாண்டுக்கு இணையான போலீஸ் என்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்ற காவல்துறை தான் தமிழ்நாடு காவல்துறை. இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவெடுப்பார்.
சிபிஐ ஆரம்பத்திலிருந்து விசாரிக்க ஆரம்பித்தால் காலதாமதம் தான் ஏற்படுமே தவிர துரிதமான பலன் நிச்சயம் கிடைக்காது. நாங்கள் இந்த விவகாரத்தில் எடுத்திருக்கிற நடவடிக்கையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் திருப்தியில் உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தான் சில அரசியல் கட்சியினர் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். நிச்சயம் 2026 தேர்தலில் திமுகவுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தாது. திமுக நிர்வாகிகள் ஒருவருக்காவது இதில் தொடர்பு இருந்திருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார், யாரையும் அவர் மன்னிக்க மாட்டார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எந்த மர்மமும் இல்லை மர்மம் இருந்தால் தானே அதன் முடிச்சுகளை அவிழ்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்; தமிழக அரசு மேல்முறையீடா? அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.