பெண்கள் சுயமாக வாழ வயசு தடையில்லை!

3 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

90 வயது அம்மாவும் 72 வயது மகளும் இணைந்து இயற்கையான முறையிலான பண்ணை விடுதி ஒன்றை நடத்தி வருகின்றனர். ‘பார்ம் ஸ்டே’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த பண்ணை வீடு முதலில் பொட்டல் காடாகத்தான் இருந்துள்ளது. அந்த இடத்தை அழகான பண்ணையாக மாற்றி, அதில் இயற்கை விவசாயம் செய்து, அங்கு விளையும் காய்கறிகளை கொண்டுதான் உணவு தயாரித்து, வரும் விருந்தினர்களை உபசரித்து வருகின்றனர் அம்மா, மகள் இருவரும்.

பிடித்ததை செய்யவும் சுயமாக வாழவும் வயது என்றைக்குமே தடையாக இருந்ததில்லை என்கிறார்கள் இவர்கள். இது குறித்து பார்ம் ஸ்டேவின் நிறுவனர்களில் ஒருவரான கஸ்தூரி பண்ணைப் பற்றி விவரித்தார்.‘‘சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்தில் இருக்கும் இரட்டனை என்ற கிராமம். அம்மாவின் பெயர் லட்சுமி. கிராமத்தில் பொதுவா பெண்களை அதிகமா படிக்க வைக்க மாட்டாங்க. நான் எட்டாவது வரைதான் படிச்சிருக்கேன். அதன் பிறகு படிப்பை நிறுத்திட்டாங்க. அதனால் வீட்டிலேயே இருந்துவிட்டேன். சில வருடங்களில் எனக்கு கல்யாணமானது.

நான் வளர்ந்தது கூட்டுக்குடும்பம் என்றாலும் அம்மாவும் அப்பாவும் எனக்காக ஒரு இடத்தை வாங்கி வச்சிருந்தாங்க. திருமணத்திற்குப் பிறகு என்னிடம் அந்த நிலத்தை ஒப்படைத்த பிறகு அந்த நிலத்தைப் போய் பார்த்தேன். முழுக்க முழுக்க கருவேல மரங்களாக இருந்தது. அதனை சுத்தம் செய்து மரங்கள் நட்டோம். ஆனால் அந்த மரங்கள் துளிர் விடவே இல்லை. எல்லாம் பட்டுப் போனது. ஆனாலும் நாங்க மனம் தளரவில்லை. மண்ணை வளமாக்க எரு, உரம் எல்லாம் சேர்த்தோம். அதன் பிறகு மீண்டும் மரங்களை நட்டோம்.

மரங்கள் ஒரு பக்கம், செடிகள் மறுபக்கம் என நடவு செய்தோம். நாங்கள் அவ்வப்போது அங்கு சென்று வருவதால், அங்கு இலைப்பாற தனிப்பட்ட இடம் அமைத்தோம். மேலும் தோட்டத்தை வலம் வர ஒரு நடைபாதையும் ஏற்படுத்தினோம். மண்ணின் தன்மை மாறியதால், நான் நட்டு வைத்த செடிகள், மரங்கள் எல்லாம் செழிப்பாக வளர ஆரம்பித்தது. பார்க்கவே அழகாக இருந்தது. இதற்கு நடுவே தங்கினால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை எழுந்தது. அங்கு தங்குவதற்கு வசதியாக ஒரு கட்டிடம் எழுப்பினோம்’’ என்றவர் பலரும் வந்து தங்கி செல்லும் இடமாக அந்த இடத்தை மாற்றியதை பற்றி பேசத் தொடங்கினார்.

“கருவேல மரங்கள் நிறைந்த இடத்தை பசுமையாக மாற்றிய பின்னர் நானும் என் அம்மாவும் அந்த இடத்திலேயே தங்க முடிவு செய்தோம். எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விளைவிக்க ஆரம்பித்தோம். அந்த காய்கறிகளை கொண்டுதான் சமையல் செய்வோம். என் அம்மாவிற்கு சும்மா இருக்க பிடிக்காது. ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருப்பார். நாங்கள் இருந்த இடம் அழகானதாக இருந்ததால், என் மகனின் நண்பர்கள் பலரும் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு நாங்கள் அங்கு எங்களுக்காக சமைக்கும் உணவினைதான் கொடுப்போம்.

அது எல்லோருக்கும் பிடித்துப் போகவே அந்த உணவினை சாப்பிடவே தொடர்ந்து வரத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் இதனை தங்கும் விடுதியாக அமைக்கலாம் என்று அம்மா சொன்னார். எனக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது. அம்மாவும் நம்பிக்கையாக சொன்னதும் என் மகனும் அதை தங்கும் விடுதியாக அமைக்க சம்மதம் இருந்தாலும் எங்களின் வயதினை எண்ணி கொஞ்சம் தயங்கினார்.

அம்மாவிற்கு எப்போதும் பெண்கள் இன்னொருத்தரை சார்ந்து வாழக்கூடாது என்ற எண்ணம் உண்டு. அந்த எண்ணத்தை என் மனதிலும் அவர்கள் விதைத்திருந்தார்கள். ஆனால் என்னவென்றால், அப்போது அம்மாவிற்கு 90 வயது. எனக்கும் வயசாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் சொந்தக் காலில் நிக்கணும் என்ற அந்த நினைப்பு தான் எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இருவரும் துணிந்து இறங்கினோம்.

நாங்க வசித்து வந்த இடத்திலேயே புதிய ஒரு வீடு ஒன்றை கட்டினோம். காரணம், ஓட்டலில் தங்கும் உணர்வு வரக்கூடாது என்பதில் நாங்க உறுதியா இருந்தோம். இயற்கையான காத்து, அமைதியான இடம், பரபரப்புகளுக்கு நடுவே இப்படி ஒரு சூழல் இருந்ததும் பலரும் தங்குவதற்கு வர ஆரம்பித்தாங்க. நாங்கதான் அவங்களுக்கு தேவையானதை சமைத்து தருவோம். இயற்கை விவசாயம் என்பதால், இங்கு விளையும் நெல், காய்கறிகள், பழங்கள், கீரைகள்தான் உணவில் இருக்கும். காபி, டீ-க்கும் கூட நாங்கள் வளர்க்கும் மாடுகளின் பாலைதான் பயன்படுத்துகிறோம்.

இயற்கையோடு இயைந்து வாழும் அனுபவம் பெற இங்கு வருவோருக்கு சிகரெட் பிடிக்கவும், மது அருந்தவும் அனுமதி இல்லை. சமூக வலைத்தளங்கள் மூலமாதான் இந்த இடம் பிரபலமானது. இங்கு வருபவர்கள் பெரும்பாலும் எங்களின் உணவினை சாப்பிடவே வரத் தொடங்கினாங்க. மேலும் இந்த இடம் ஒரு சின்ன தீவு போலதான் இருக்கும். எங்க இடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் பாலைவனம் போல இருக்கும். இங்கதான் காற்றோட்டமா குளுமையா இருக்கும். அதற்காகவே பலரும் இங்க வராங்க. இங்கு இரண்டு வீடுகள் உள்ளன.

பலரும் குடும்பமாக வந்து தங்கி மகிழ்ந்துவிட்டுப் போறாங்க. குடும்பமா வரும் போது குழந்தைகள் எங்களை விட்டுப் பிரிய மனசில்லாமதான் போவாங்க. தங்கும் விடுதியா பார்க்காம, அவங்களின் பாட்டி வீடாகத்தான் நினைச்சு வராங்க. அவங்க எங்களை அம்மா, பாட்டின்னு அழைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். உணவும் கிராமத்து முறையில் தான் சமைக்கிறோம். வீட்டில் விருந்தினர் வந்தா எப்படி எப்படி சமைப்போமோ அப்படித்தான் இங்கு தங்குபவர்களுக்கு சமைத்து தருகிறோம்.

இங்கு சிறிய அளவில் நூலகமும் வைத்துள்ளோம். அமைதியான இடத்தில் புத்தகங்கள் படிக்க விரும்புவார்கள். அவர்களுக்காகவே அதனை அமைத்திருக்கிறோம். இதை ஒரு தொழிலா தொடங்கிய போது, நானும் என் அம்மாவும்தான். இப்போ இங்கு 10 பெண்கள் வேலை பார்க்கிறாங்க. அம்மா இப்ப மூணு மாசம் முன்புதான் தவறினாங்க. அவங்களின் கடைசி காலமான 92 வயசிலும் ஓய்வில்லாம தன் சொந்தக்காலில் தான் நின்னாங்க. அவங்கள மாதிரியே நானும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்’’ என்கிறார் கஸ்தூரி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பெண்கள் சுயமாக வாழ வயசு தடையில்லை! appeared first on Dinakaran.

Read Entire Article