ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்…

3 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

Rarest Of Rare Cases

சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் பொது மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று, கேரள பாறசாலை பகுதியில், காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில், க்ரிஷ்மா என்ற பெண்ணிற்கு நெய்யட்டிங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மரண தண்டனை. மற்றொன்று, கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் சியல்டா நீதிமன்றத்தால் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை. இரு வேறு வழக்குகள்… இரு வேறு நீதிமன்றங்கள்… இரு வேறு குற்றவாளிகள்… இரு வேறு சூழ்நிலைகள்…

ஆனால் இரண்டு தீர்ப்புகளும் ஒரே நாளில் வழங்கப்பட்டன.1980ல் பச்சன் சிங்குக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட Rarest Of Rare Cases என்ற வரையறையின்படி, கேரள வழக்கில் குற்றம் இழைத்த பெண்ணிற்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா முழுக்க திரும்பிப் பார்த்த கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இரண்டு வழக்கையும் ஒப்பிட்டு, சஞ்சய் ராய்க்கும் மரண தண்டனை வேண்டும் என மக்கள் பேசுகிறார்கள்.

மரண தண்டனைக்கு எதிரான கருத்து கொண்ட கிருஷ்ணய்யர் போன்ற சிறந்த நீதியரசர்கள் Rarest Of Rare Cases என்ற கொள்கையைத் துளியும் ஏற்கவில்லை. ஒரு மரண தண்டனையை கூட உறுதி செய்யாமல் இருந்தனர் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒருவேளை கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு மேற்சொன்ன நீதியரசர்கள் கீழ் வந்திருந்தால், ஆயுள் தண்டனையை அதிகபட்சத் தண்டனையாகக் கருதிக் கொடுத்திருப்பார்களே தவிர, மரண தண்டனையை அல்ல என்பதையும் உறுதியாகச் சொல்லலாம். இந்த வாதம் சிலருக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பும். குற்றம் செய்தவனுக்குத் தண்டனை வேண்டாமா என்பதே அது. தண்டனை வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் அது மரண தண்டனை அல்ல.

மரண தண்டனையை ஒருவருக்குக் கொடுப்பதன் மூலமாக இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை நாம் கொண்டுவரப் போகிறோம். இதனால் பாலியல் வன்கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கப் போகிறதா? அப்படியென்றால், மரண தண்டனை உள்ள நாடுகளில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதில்லையா? மரண தண்டனை இல்லாத நாடுகளில் குற்றங்கள் குறைந்திருக்கிறதா? இவற்றுக்கெல்லாம் கணக்கெடுப்புகள் இருக்கிறதா?

கொல்கத்தா நீதிமன்ற தீர்ப்பில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கொடுக்கப்படாததற்கான காரணமாக அவர்கள் சொல்வது, மனதளவில் குற்றவாளி அந்த மாதிரியான பாதிப்புக்கு உள்ளானவன். அதனால்தான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தி, கொலை செய்துள்ளான். எனவே இதை அரிதுனும் அரிதான வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற வார்த்தை சொல்லப்பட்டது.ஒரு சாமானியனுக்கு, ஒரு பெண்ணின் மீது இப்படியான பார்வையும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யவும் தோன்றுகிறது என்றால், அவர் வளர்ந்த பின்னணி என்ன? எப்படியாக வளர்க்கப்பட்டார்? அவரின் குடும்பப் பின்னணி என்ன? அவர் வர்க்கம் என்ன? எதனால் அவர் இப்படி மாறினார்? இதற்கெல்லாம் யார் காரணம்? என்கிற கேள்விகளும் தொடர்ந்து எழத்தானே செய்யும்.

இந்த மாதிரியான மனநோயாளிகள் உருவாவதற்கு சமூகம், அரசு, இந்த அமைப்பு முறை போன்றவை காரணம் இல்லையா? அவரை மட்டுமே எப்படி 100% காரணமாகக் கருத முடியும். இதில் குற்றம் இழைத்தவருக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டும் எப்படி குற்றத்திற்கான தீர்வாக அமையும்.இந்த மாதிரியான மன நோயாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலமாக சமூகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா? 5 வயதிலே ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஹார்மோனில் மாற்றங்கள் வந்துவிடுகிறது.

அப்படியென்றால் 10 வயதுக் குழந்தைக்கு பாலியல் கல்வி இங்கு தேவையா? இல்லையா? பாலியல் தொடர்பான காட்சிகளை ஊடகங்கள் வழியாக பார்க்கும் குழந்தைகள் மனதில், அந்தக் காட்சிகள் ஆழமாகப் பதியும்போது, தன் இச்சையை தீர்த்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற முடிவுக்கு அவர்கள் செல்கிறார்கள்.கல்வியில் இருந்தே இங்கு மாற்றங்கள் தேவை. குட் டச் பேட் டச் என்பதை மட்டுமே பத்தாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்க முடியாது. பாலியல் கல்வியை ஆசிரியர், மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். அடிப்படையாக அரசிடம் நாம் கேட்பது பாலியல் கல்வியும், பாலியல் சமத்துவக் கல்வியும்தான். நமக்குத் தேவை ஒரு சமூக மாற்றம். அப்படி வந்தால்தான் இந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளை தடுத்து நிறுத்த முடியும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.

ஒவ்வொரு நீதிபதியும் அந்த வழக்கின் சூழ்நிலைகளைப் பொறுத்துதான் அரிதுனும் அரிதான வழக்கா என்பதை நிர்ணயிக்க முடியும் என்கிறார்கள். ஒரு தீர்ப்பு என்பது, குற்றம்சாட்டப்பட்டவரைப் பொறுத்து, சூழ்நிலைகளைப் பொறுத்து, நீதிபதியை பொறுத்து, வழக்காடும் வழக்கறிஞரைப் பொறுத்து மாறக்கூடியதுதான் எனும்போது, நாம் எப்படி மரண தண்டனையை ஒத்துக்கொள்ள முடியும்? அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என சொல்வது எப்படி நியாயமாக அமையும்.

தொகுப்பு: சுதா காந்தி, வழக்கறிஞர்

 

The post ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்… appeared first on Dinakaran.

Read Entire Article