விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை நிறுத்தம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

5 hours ago 2

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைக்கால சீசனாக கருதப்படுகிறது.

இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பொதுவாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல 3 படகுகள் இயக்கப்படுவது வழக்கம். இவற்றில் ஒரு படகு பராமரிப்பு பணிக்கு சென்றுள்ளதால் தற்போது 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு சேவை தொடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கு திடீரென படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதாவது விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்ட 2 படகுகளில் ஒரு படகு சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் கேட்ட போது கடலில் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் படகு துறையில் சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் 5 மணி நேரம் கழித்து கடல்நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மதியம் 2 மணிக்கு மீண்டும் படகு சேவை தொடங்கியது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கண்டு களித்தனர். பிறகு அங்கிருந்து கண்ணாடி நடைபாலத்தில் நடந்து சென்று கடலின் அழகை ரசித்த அவர்கள் திருவள்ளுவர் சிலை பகுதிக்கும் சென்று பார்வையிட்டனர். 

Read Entire Article