சென்னை: “திமுக-வினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான, உதாரணமான விவசாய பட்ஜெட். விவசாய பட்ஜெட் என்ற பெயரில் கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள். அதுதான் தமிழக வேளாண் பட்ஜெட்டின் சாதனை. இந்த விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் வேளாண் பட்ஜெட் 5-வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைப் போலவே, அதையே தொடர்ந்து இந்தாண்டும் தாக்கல் செய்துள்ளனர்.