சென்னை: வெவ்வேறு காலகட்டங்களில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளை திமுக எம்.பி கனிமொழி பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.
மும்மொழி கொள்கை விவகாரம் இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் நிலவி வரும் நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசும்போது, “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.