விவசாயிகளுக்கு விதைநெல் தடையின்றி கிடைக்க நடவடிக்கை!

1 day ago 1

தமிழகத்தில் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டம்தோறும் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு, வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் விவசாயிகளுக்கான குறைகேட்பு, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டார விவசாயிகள் கலந்துகொண்டு தங்களின் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 7778 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1443 மெட்ரிக் டன், பொட்டாஷ் 3347 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 5309 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1111 மெட்ரிக் டன் என மொத்தம் 18,987 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் ஜிப்சம் 281.2 மெட்ரிக் டன், பருத்தி 16.4 மெட்ரிக் டன், நிலக்கடலை 32.2 மெட்ரிக் டன், சோளம் 5.8 மெட்ரிக் டன், நெற்பயிர் 42.2 மெட்ரிக் டன், தானியம் 27.6 மெட்ரிக் டன், கரும்பு 6.0 மெட்ரிக் டன், மேங்கனிஸ் சல்பேட் 3.6 மெட்ரிக் டன், சிங்க் சல்பேட் 104.0 மெட்ரிக் டன் என மொத்தம் 519.1 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1155.61 மில்லி மீட்டர் மழை பெய்தது. 2024ம் ஆண்டில் சாதாரணமாக 1206.7 மில்லிமீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 1460.6 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு வழங்கப்படும் பயிர்க் காப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிட வேண்டும். அரசு மானியங்களை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்குப் பருவமழை நிலவுவதால் விவசாயிகள் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடவும், மழைக்காலங்களில் பயிர் விளைச்சலின்போது ஏற்படும் மின் துண்டிப்பு, மின் அழுத்தம் போன்ற இடர்ப்பாடுகளை சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை கொள்முதல் நிலையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கு ஏதுவாக சாலைகளை செப்பனிடவும் வேண்டும். விவசாயிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், கிசான் கிரெடிட் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களை உரிய காலக்கெடுவிற்குள் வழங்கிடவும், விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை சாத்தியக்கூறின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஆய்வுசெய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

The post விவசாயிகளுக்கு விதைநெல் தடையின்றி கிடைக்க நடவடிக்கை! appeared first on Dinakaran.

Read Entire Article