விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்களையும் அதன் பலன்களையும் பெறுவதற்கு தங்களது நிலஉடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் கூட தாமதமாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனை சரிசெய்யும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ விவசாய அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மைதுறை இணை இயக்குநர் வே.கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, கோவை மாவட்டத்தில் மட்டும் 85429 விவசாயிகள் உள்ளனர். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசின் மூலம் கிடைக்கும் சலுகைகள் மற்றும் வேளாண் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை காலதாமதமாகத்தான் வந்தடைகிறது. இதனை சரிசெய்யும் வகையில் அரசின் திட்டங்கள் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறுவதற்கு அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண்அடுக்குத்திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் (CSCs) சென்று அங்கும் நிலஉடைமை விவரங்களை இணைக்கலாம். அதன்பின், அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் விரைவில் வந்தடையும். 2025-26 ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க்காப்பீட்டுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நிலஉடைமை விவரங்கள், ஆதார், கைபேசிஎண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாமென வேளாண்மைதுறை இணை இயக்குநர் வே.கிருஷ்ணவேணி கூறுகிறார்.
The post விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை… appeared first on Dinakaran.