*அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு பரம்பிக்குளத்தில் தண்ணீர் திறக்கும் போது காண்டூர் கால்வாய் வழியாகவும். மழை இருக்கும் போது நவமலை, கவியருவி ஆகிய வழிகளிலிருந்தும் தண்ணீர் வரத்து இருக்கும்.
இந்த அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுபோல் கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர், அவ்வப்போது திறக்கப்படுகிறது.
ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் பாசனம் மூலம் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்திருக்கும்.
இதில், 2024ம் ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியான 120 அடியையும் எட்டி தண்ணீர் கடல்போல் காணப்பட்டது. மேலும், அதே ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக சுமார் 110 அடிக்கு மேல் இருந்தது.
ஆனால், கடந்த 2023ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையில்லாததால், தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, அணையின் நீர்மட்டம் சரிய துவங்கியது.
இப்படி கடந்த சில மாதமாக போதிய மழையில்லாமல் கோடை வறட்சியால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, கடந்த மாதம் இறுதியில் நீர்மட்டம் 65 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் அணையின் பெரும்பாலான பகுதி பாறைகளாகவும், மணல் மேடாகவும் காட்சியளிக்கிறது.
மேலும், எப்போதும் தண்ணீர் இருக்கும், இடத்திலும் தண்ணீர் வற்றி செடி கொடிகள் வளர்ந்து காடு போல் உள்ளது. பருவமழை பெய்வதற்கு முன்பு ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
போதிய மழைப்பொழிவின்றி வறட்சியால் நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தேவைக்கும் மற்றும் விவசாய பாசனத்துக்கும் தேவையான தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அப்பர் ஆழியார் மற்றும் பீடர் கால்வாய் வழியாக விநாடிக்கு 250 முதல் 300 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய தேவையான குடிநீருக்காக ஆழியார் அணையில் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அதற்கான வரைமுறை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விவசாயம், குடிநீர் தேவைக்கு ஆழியார் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.