புதுடெல்லி: விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கூட வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதன் காரணமாக அந்த சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றது. தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது, வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது, போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது, உலக வர்த்தக அமைப்பின் நிர்ப்பந்தங்களில் இருந்து வெளியேறுவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த கோரிக்கைகளுக்கே தீர்வு காண முடியாத நிலையில் இப்போது விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 2025-2026ஆம் நிதியாண்டில் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தில் நவீன நீர்பாசன மேலாண்மை மற்றும் நீர்மேலாண்மை நவீன மயமாக்கலுக்காக ரூ.1600 கோடி ஆரம்ப கட்ட நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாசனத்திற்கு நீர் வழங்கும் திட்டத்தை நவீனமயமாக்கி, ஏற்கனவே உள்ள கால்வாய்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வழங்கப்படும் பாசன நீரை ஒரு நவீன திட்டத்தில் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய நீர்ப்பாசனம் மற்றும் மழைப்பொழிவு முறைகளை விவசாயிகள் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஒன்றிய அரசின் முயற்சியால் நவீன பாசன வசதி செய்து நேரடியாக விவசாயிகளுக்கு பைப் லைன் மூலம் தேவைப்படும் தண்ணீர் பாசனத்திற்கு சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஐஐடி கான்பூர் மூலம் இதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டம் வயல்களுக்கு சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்யும். மேலும் விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும். காலாவதியான நீர்பாசன அமைப்புகளுக்குப் பதிலாக அழுத்தப்பட்ட குழாய் நீர்ப்பாசன வலையமைப்பைப் பயன்படுத்தி ஒவ்வொரு விவசாய நிலங்களுக்கும் நேரடியாக தண்ணீரை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம் 90% வரை நீர் பயன்பாட்டுத் திறனை உறுதி செய்யும் என்றும் நீர் வீணாவதை குறைக்கும் மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவுக்கு வரும். இரண்டாம் கட்ட திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பாசன நிலங்கள் உள்ள பகுதிகளில் தண்ணீரை சேமித்து வைக்க சிறிய அளவிலான அணைகள் கட்டப்பட்டு அங்கிருந்து பைப் மூலம் நேரடியாக ஒவ்வொரு விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு விவசாய நிலத்திற்கும் வழங்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட அதற்கேற்ற வகையிலான குழாய்கள், சென்சார்கள், பம்புகளுடன் இணைந்த நவீன நீர்ப்பாசன அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் செயலாளர், மாநில அளவில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்ளூர் அளவில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழுவால் கண்காணிக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பாசன நீர் உரிய முறையில், நவீன கருவிகள் மூலம் கணக்கிட்டு, கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் இப்படி விவசாயிகளுக்கு நவீன முறையில் வழங்கப்படும் பாசன நீருக்கும், விவசாயத்துக்கு விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கம் வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் குறைக்க, விவசாய நோக்கங்களுக்காக நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து இந்த முன்னோடி திட்டத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார். அவர் கூறுகையில்,’ ஒன்றிய அரசின் புதிய திட்டம் மூலம் போதுமான அழுத்தத்துடன் ஒரு பொதுவான இடத்தில் போதுமான தண்ணீர் அணைகள் மூலம் சேகரித்து வைக்கப்படும். அங்கிருந்து பைப் லைன் மூலம் வெவ்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த முடியும். பயனர்கள் அவர்கள் பயன்படுத்தும் நீரின் அளவைப் பொறுத்து வரி விதிக்கப்படும்’ என்று தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
* நாடு முழுவதும் விவசாய பயிர்களுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
* வருடாந்திர நிலத்தடி நீர் அறிக்கையின்படி, 239.16 பில்லியன் கன மீட்டர் நீரில் 87% விவசாயத் துறையால் எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* மாநிலங்களுக்கு அதிகாரம்
நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாசன நீர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது அவசியம். நீர் வீணாவதைக் கட்டுப்படுத்த உள்ளூர் நீர் பயனர் சங்கங்கள் உரிய வரி விதிக்க வேண்டும் என்று குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் அசோக் கே மீனா கூறினார்.
The post விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்க முடிவு: ஒன்றிய அரசின் புதிய திட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், விவசாயிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.