விவசாய சங்க தலைவரின் மகளான பஞ்சாபி நடிகை ஆம்ஆத்மியில் ஐக்கியம்

3 hours ago 2

சண்டிகர்: விவசாய சங்க தலைவரின் மகளான பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் முடிந்த நிலையில், ஆம்ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான், தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், ‘கிர்த்தி கிசான் அமைப்பு தலைவர் பல்தேவ் சிங்கின் மகளும், பஞ்சாபி நடிகையுமான சோனியா மான், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

ஆம் ஆத்மி கட்சி குடும்பத்தில் அவருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக சோனியா மான் மலையாளம், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளின் படங்களில் நடித்துள்ளார். முதன்முதலாக ‘ஹைட் என் சீக்’ என்கிற மலையாள படத்தில் அவர் அறிமுகமானார். மேலும் அவர் 2020ல் ஹேப்பி ஹார்டி மற்றும் ஹீர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது தந்தை கிர்த்தி கிசான் அமைப்பின் தலைவர் பல்தேவ் சிங் ஆவார். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்திலும் சோனியா மான் பங்கேற்றார். ஆம்ஆத்மியில் இணைந்தது குறித்து சோனியா மான் கூறுகையில், ‘ஆம்ஆத்மி தலைவர்களின் பணி மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்பட்டேன். பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் பணிகளைப் பார்த்து, அக்கட்சியில் சேர்ந்தேன். எந்தப் பிரச்னை குறித்தும் ஆம்ஆத்மி எம்எல்ஏ அல்லது அமைச்சரிடம் எழுப்பிய போதெல்லாம், அவர்கள் அதை முன்னுரிமை அடிப்படையில் செய்தார்கள்’ என்று கூறினார்.

The post விவசாய சங்க தலைவரின் மகளான பஞ்சாபி நடிகை ஆம்ஆத்மியில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Read Entire Article