*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ரெட்டிச்சாவடி : விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்தி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து சாலை பணிகள் தொடங்கி புதுச்சேரி-கடலூர் என 134 கிராமங்கள் வழியாக புறவழிச்சாலையை கடந்து நாகப்பட்டினம் வரை பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை பல்வேறு கிராமங்களுக்கு இடையே செல்கிறது.
இதனால் அருகில் உள்ள கிராமங்கள் இணைப்பு சாலையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இச்சாலையானது முழுமை பெறாமலே கடந்த சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு இடங்களில் இச்சாலை பணிகள் முழுமை பெறாததால் பல்வேறு விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரெட்டிச்சாவடி அருகே சோரியாங்குப்பத்தில் இருந்து இணைப்பு சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த இணைப்பு சாலையில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.
இரவு நேரங்களில் இணைப்பு சாலையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் விபத்து ஏற்படுவதற்கு முன் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post விழுப்புரம்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.