விழுப்புரம், கடலூரில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

2 days ago 2

விழுப்புரம்,

வங்கக்கடலில் கண்ணாமூச்சி காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இதற்கு பெஞ்சல் என்று பெயரிடப்பட்டது. இது மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "விழுப்புரத்துல வரலாறு காணாத மழையா பெய்துகொண்டே இருக்கிறது. மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும். பேருந்து நிலையத்தில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். புருஷோத்தமன் நகரப் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.

Read Entire Article