விழுப்புரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நள்ளிரவில் ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தம்

2 months ago 7

விருத்தாசலம், டிச. 3: சென்னையில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினமும் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் மழை கடலூர் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை உள்ளாக்கி உள்ளது. இதனால் விழுப்புரத்தில் பெய்த கனமழையால் விழுப்புரம் ரயில் நிலையம் மூடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே உள்ள வராக நதி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் தண்டவாளத்தை கடந்து வெள்ளநீர் சென்றது. இதனால் கன்னியாகுமரியில் இருந்து விருத்தாசலம் வழியாக விழுப்புரம் நோக்கி சென்ற கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 30ம் தேதி இரவு 2.27 மணிக்கு விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்றது. மீண்டும் அதிகாலை 4.30 மணிக்கு விழுப்புரம் நோக்கி 2 மணி நேரம் தாமதமாக சென்றது. திருநெல்வேலி-சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 2.45 மணிக்கு விருத்தாசலம் வந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 2.45 மணி நேரம் தாமதமாகவும், மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இரவு 2.20க்கு சென்று நிறுத்தப்பட்டது.

மேலும் தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாகவும், ராமேஸ்வரம்-சென்னை சேது எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாகவும், கேரளா கொச்சுவேலி-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் நேற்று காலை 7 மணிக்கு விருத்தாசலத்திற்கு வந்து நிறுத்தப்பட்டு, ரத்து செய்யப்படுவதாக காலை 8.45 மணிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டு, விருத்தாச்சலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. விழுப்புரத்தில் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் ரயில்கள் நள்ளிரவில் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் மார்க்கத்திற்கு செல்வதற்கான பேருந்து ஏற்பாடுகளை விருத்தாசலம் வருவாய் துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது.

The post விழுப்புரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நள்ளிரவில் ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article