விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கற்கோடாரி, வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் சரவணன், ராகுல், பவதாரணி, சசிகுமார், ஜோதிலட்சுமி, பர்வின், சங்கீதா, சத்யா, சோபியா ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேய்ந்த நிலையில் உள்ள புதிய கற்காலத்தை சேர்ந்த 2 கை கோடாரி கருவி மற்றும் வட்டச்சில்லுகள் ஆகியவற்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கூறியதாவது: பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் முதுகலை வரலாற்றுத்துறை மாணவர்களாகிய நாங்கள் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டபோது வித்தியாசமாக வழுவழுப்பான 2 கருங்கற்கள் மற்றும் வட்டமான சில்லு போன்றவற்றை கண்டறிந்தோம். கண்டறிந்த பொருட்களை ஆய்வாளர் இம்மானுவேலிடம் காண்பித்தோம். இதனை பார்த்த அவர் நாங்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் புதிய கற்காலத்தை
சேர்ந்த கற்கோடாரி மற்றும் சங்க காலத்தை சேர்ந்த வட்டச்சில்லுகள் என்று அவர் கூறினார்.
தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கருவி புதிய கற்காலத்தை சேர்ந்த கை கோடாரியாகும். இந்த கைகோடாரி ஒரு புறம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் உள்ளது. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். புதிய கற்கால காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது. மனித குலத்தின் தொன்மை வரலாற்றை பழைய கற்காலம், இடை கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம். பழைய கற்காலத்தில் மனிதன் உணவை தேடி அலைந்து நிலையான இருப்பிடம் இன்றி வாழ்ந்தான். புதிய கற்காலத்தில் மனிதன் தனக்கென ஒரு நிலையான வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றான். இக்கால கட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள் மற்றும் சக்கரத்தால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளான்.
புதிய கற்கால கருவிகள் மனிதனின் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இதுபோன்ற புதிய கற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் மயிலாடும்பாறை, மாங்குடி, பையம்பள்ளி, கல்வராயன்மலை, பட்டறைபெரும்புதூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. சுடுமண்ணால் ஆன 6 வட்டச்சில்லுகள் தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த வட்டச்சில்லுகளை பயன்படுத்தி பொழுது போக்கிற்காக விளையாடியுள்ளனர். இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. இதுபோன்ற வட்டச்சில்லுகள் தமிழக தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வுகளில் தமிழகத்தில் ஏராளமாக கணடறியப்பட்டுள்ளது என்று வரலாற்று துறை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதிய கற்கால கற்கோடாரி, வட்ட சில்லுகள் கண்ெடடுப்பு: 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை appeared first on Dinakaran.