
நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் டிப்பர் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதனால், ரெயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். எனினும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பவத்தின்படி, டிராக்டர் ஒன்று ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது, தண்டவாளத்தின் நடுவே பழுது ஏற்பட்டு நின்று விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அதன் ஓட்டுநர் என்ஜினை மட்டும் கழற்றி விட்டுள்ளார். ஆனால், டிராக்டரின் டிப்பர் தண்டவாளத்தின் நடுவே நின்றிருந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால், அந்த வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்களின் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். டிராக்டர் டிப்பர் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.