
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விஷயங்கள் குறித்து பொது ஊடகங்களில் பகிரங்கமாக கருத்து கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக இயக்கம். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. அதை கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொள்வது தான் நடைமுறையாக இருந்து வருகிறது.
அத்தகைய நடைமுறைக்கு முற்றிலும் மாறாக ஊடகங்களின் மூலமாக கருத்து கூறுவதையும், விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அனைவரும் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் என் மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் குறித்து எத்தகைய விமர்சனங்களையும் அனுமதிக்க முடியாது. அவை கட்சி விரோத நடவடிக்கைகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.