
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த அ. வேல்முருகன் இடம் பெற்றிருந்தார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பணி நியமன ஆணை வழங்கப்படாததன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அ. வேல்முருகன் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால், அலட்சியப் போக்கினால், நிர்வாகத் திறமையின்மையால், வேல்முருகனின் உயிர் பறிபோயிருக்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பணி நியமன ஆணைகளை வழங்க காலதாமதப்படுத்தும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. அரசின் ஆமை வேகச் செயல்பாட்டால், ஒரு குடும்பம் இன்று ஆதரவின்றி நிற்கிறது. இந்தத் தருணத்தில் உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்திற்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசிற்கு இருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பட்டதாரி ஆசிரியராக தேர்ச்சி பெற்றும் பணி நியமன ஆணை வழங்காததன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு வேல்முருகன் உயிரிழந்து இருப்பதால், இந்த உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்று அவரின் மனைவிக்கு அவரது தகுதிக்கு ஏற்ப உடனடியாக அரசு வேலை வழங்கவும்; இனியாவது, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கவும், முதல்-அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.