*மீண்டும் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடையால் தற்போது கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி சாலை விரிவாக்கத்துக்காக முக்கிய பேருந்து நிறுத்தங்களில் இருந்த பயணிகள் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டன.
அதன்படி விழுப்புரம் சிக்னல், காந்தி சிலை, ரயில்வே ஜங்ஷன், மாதா கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டன.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மீண்டும் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயில், மழை காலங்களில் சாலையிலேயே நின்று கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் விழுப்புரம் மார்க்கம் பகுதிகளிலும், கிழக்கு பாண்டி ரோடு மற்றும் ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும், வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தற்போது பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு ஒதுங்குவதற்கு கூட பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவர்கள் நீண்ட நேரம் வெயில் காத்திருந்து நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து போக்குவரத்து காவல்துறை சிக்னல் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துதர முன்வந்த போதும் மின்வாரிய அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
சிக்னல் பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை தள்ளி வைக்குமாறு கேட்டபோது தங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்களாம். இதனால் போக்குவரத்து காவல்துறையும் பயணிகள் நிழற்குடை கட்டும் பணியை தள்ளி போட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி விழுப்புரம் நகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமை பந்தல் அமைக்கப்படுமா……
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முக்கிய நகரங்களில் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி போக்குவரத்து காவல்துறை சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் நகரில் சிக்னல், காந்தி சிலை, வீரவாழியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல் போடப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கின்றனர். அங்கு பசுமை பந்தல் அமைக்கப்படாததால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மற்ற நகரங்களை போல் அங்கும் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post விழுப்புரத்தில் சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்டது பயணிகள் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் அவலம் appeared first on Dinakaran.