
சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...! தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
இரண்டாவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடமிருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது. இயல்பாக கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்து திமுக அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு 1,200 நாட்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற மறுப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது வன்னியர்கள் மீது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த அளவுக்கு வன்மம் வைத்திருக்கிறது? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், டாக்டர் ராமதாசின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.
அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 2-ம் தேதி, இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம். நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.
இதை மனதில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளித் தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.