பரபரப்பான சூழலில் இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..? அஸ்வின் கணிப்பு

4 hours ago 2

சென்னை,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் உள்ளார்.

இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை. இத்தகைய பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற யாருக்கு வாய்ப்பு அதிகம்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "இந்த நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பெரிய கணிப்பு. எனினும் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் நினைத்தால் இந்த ஆட்டத்தை மாற்றமுடியும்" என்று கூறினார்.

Read Entire Article