ஆட்சி பயணத்தில் 4 ஆண்டுகள்

5 hours ago 1

2021-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மகுடத்தை சூட்டியது. இந்த வெற்றிக்கு முழு, முழுக்காரணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வித்தியாசமான பாணியில் நடத்திய பிரசாரமும், தேர்தல் அறிக்கையில் அவர் கொடுத்த 505 வாக்குறுதிகளும்தான். ஆட்சி பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அதாவது மே மாதம் 7-ந்தேதி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுத்தான் அவர் தனது பணியை தொடங்கினார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 16-5-2021 முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. சாதாரண கட்டண நகர பஸ்களில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம். மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்ற முத்தான 5 அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தன.

அதன்பிறகு அவர் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் பல அறிவிப்புகளாக வெளியிட்டு தமிழ்நாட்டை வளார்ச்சிப்பாதையிலும், சமூகநல பாதைகளிலும் முன்னோக்கி வேகமாக அழைத்துச்சென்றார். கடந்த 7-ந்தேதி அவருடைய ஆட்சி 4 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. 'நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு' என்று தமிழக அரசின் சார்பில் மிக பெருமிதமாக அரசு நிறைவேற்றிய பல சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி, நான் முதல்வன் திட்டம், இலவச மின்சார திட்டங்கள் என்று பல திட்டங்களை அரசு பெருமையோடு கூறினாலும், பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதுதான் இந்த அரசின் மிகவும் உயரிய சாதனையாகும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.17.23 லட்சம் கோடியை அடைந்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. பதிவுத்துறையில் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டைவிட இரட்டிப்பாகி ரூ.21 ஆயிரத்து 968 கோடியாகியிருக்கிறது. இதனால் மக்களின் சொத்து வாங்கும் திறன் அதிகரித்து இருக்கிறது என்பதை அறியலாம். தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில் தேசிய சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.2.60 லட்சமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சமாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உற்பத்தியிலும் தமிழ்நாடு பெரும் உயர்வை கண்டுள்ளது. இவ்வாறு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை பீடு நடை போட செய்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு மேலும் பல அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

Read Entire Article