விளைச்சலில் உச்சம் தொடும் வெங்கடாபுரம் காய்கறிகள்!

3 weeks ago 4

இரைச்சலும், நெருக்கடியும் மிகுந்த சென்னைச் சூழலில் இருந்து சற்று விலகி, அமைதியாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும் பட்டாபிராமை ஒட்டிய கிராமப்பகுதிகள் நம் நெஞ்சை கொள்ளையடிக்கின்றன. இங்குள்ள பல பகுதிகள் தற்போது நீரோடும் வாய்க்கால்கள், அதனால் செழித்து நிற்கும் வயல்கள் என காட்சியளிக்கின்றன. அப்படியொரு எழிலார்ந்த பூமியாக விளங்குகிறது தண்டரை கிராமம். இங்கு விளையும் கீரை, காய்கறிகள் சென்னையின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களின் பசியைப் போக்குகின்றன. குறிப்பாக பட்டாபிராமை ஒட்டி அமைந்துள்ள வெங்கடாபுரம் பகுதியில் இருந்து அதிகளவிலான கீரையும் காய்கறிகளும் தருவிக்கப்படுகின்றன. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக சிறு, சிறு பகுதிகளாக பிரித்து வெள்ளாமை பார்த்து நல்ல லாபம் பார்த்து வருகிறார் அருள் என்ற விவசாயி. ஒரு மாலைப்பொழுதில் அவரை சந்தித்தோம்.

“ எங்களுக்கு சொந்தமாக இங்கு ஒன்னேகால் ஏக்கர் கழனி இருக்கு. அதோடு 3 ஏக்கர் கழனியை குத்தகை எடுத்து பயிர் செய்யுறோம். இதுல ஒரு போகம் நெல் போடுவோம். அதாவது ஆடி மாசத்துல சொர்ணவாரி பட்டம் போடுவோம். அதுக்குப் பிறகு கீரை, காய்கறிதான். நெல் போட்டு அறுவடை செஞ்ச பிறகு நல்லா புழுதி ஓட்டி, 8ல இருந்து 10 சால் வரைக்கும் ஏர் ஓட்டுவோம். அதுக்கப்புறம் தொழுவுரம் போட்டு காய்கறி, கீரைன்னு பயிர் செய்வோம். நான் இப்போ 80 சென்ட்ல கத்திரிக்காயும், 40 சென்ட்ல வெண்டைக்காயும் போட்டுருக்கேன். 25 சென்ட்ல பாலக்கீரை, 50 சென்ட்ல மணத்தக்காளிக்கீரை போட்டுருக்கேன். இது மட்டுமில்லாம 47 சென்ட்ல பந்தல் போட்டு புடலங்காய், பாவக்காய் போட்டுருக்கேன். தரைப்பகுதியில சுரைக்காய் விதைச்சிருக்கேன்.

புடலங்காய்க்கும், கத்திரிக்காய்க்கும் நாற்றங்கால் தயாரிச்சி, நாற்றுகளை உற்பத்தி செஞ்சி நடுவோம். சுரைக்காயை அப்படியே விதைச்சிடுவோம். பந்தல்ல 7க்கு 7 அடி இடைவெளி விட்டு கம்பு நடுவோம். அதுல அதே அளவு இடைவெளியில புடலங்காய் நாற்றுகளை ஊனுவோம். அதேபோல பாகற்காய் செடிகளையும் ஊனுவோம். இது ரெண்டும் கலந்து கலந்து இருக்கும். சுரைக்காயை மேலே ஏத்துனா பந்தல் தாங்காதுன்னு கீழேயே போட்டுடுவோம். விதைச்ச பிறகும், நாற்றுகளை நட்ட பிறகும் போதிய அளவுக்கு தண்ணி கொடுத்து, களை இருந்தா பறிப்போம். பூச்சி நோய் வந்தா அதிகாரிங்க சொல்ற மருந்துகளைத் தெளிப்போம். இந்தப் பகுதியில் ஓடுற ஆறு பல சமயங்கள்ல வற்றிப்போய் இருக்கும். இப்ப தண்ணி நல்லா ஓடுது. அதுனால நிலத்தடி நீரும் நல்லா இருக்கும். இருந்தாலும் நாங்க போர் போட்டு தண்ணி பாய்ச்சிக்குவோம்.

புடலை, பாவக்காய், சுரைக்காய்ன்னு காய் வகைகள் எல்லாம் 40 – 50 நாட்கள்ல காய் காய்க்க ஆரம்பிக்கும். நாங்க தினமும் அறுவடை செஞ்சி விற்பனைக்கு கொடுப்போம். காய் பறிக்கிறதுல சில நாள் இடைவெளி விடணும்தான். நாங்க சில காய்களை பதத்துக்கு ஏத்த மாதிரி தினமும் அறுவடை செய்வோம். அறுவடை செய்ற காய்களை கழனியிலயே வச்சிருப்போம். இந்தப் பகுதி எப்பவும் விவசாயம் நடக்குற பகுதிங்குறதால காய்கறி வியாபாரிங்க நிறைய பேரு வருவாங்க. அவுங்க எங்க கழனிக்கே வந்து காய்களை எடை போட்டு மூட்டை கட்டி எடுத்துட்டு போயிடுவாங்க.

காய்களை அன்றன்றைய விலைக்கு ஏத்த மாதிரி விலை போட்டு வாங்கிட்டு போவாங்க. நாங்க பெரும்பாலும் 20 ரூபாய், 30 ரூபாய்ன்னு விலை வச்சி கொடுப்போம். வாரத்துக்கு எப்படியும் 500 கிலோ காய் மகசூலா கிடைக்கும். 4 மாசத்துக்கு தொடர்ச்சியா காய் அறுவடை செய்வோம். மொத்தமா எப்படியும் 10 டன் காய் கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய்க்கு வித்தா கூட 2 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். விதை, உழவு, களை, உரம், மருந்துன்னு அதிகபட்சம் 1 லட்சம் செலவு போனாலும் 1 லட்ச ரூபாய் லாபமா கிடைக்கும். இது பந்தல் காய்கறியில மட்டும் கிடைக்கிற வருமானம். 6 மாசத்துல 47 சென்ட்ல இப்படி வருமானம் கொடுக்குறதாலதான் நாங்க தொடர்ச்சியா காய்கறிகளை சாகுபடி பண்றோம். நாங்க வியாபாரிங்க கிட்ட கொடுக்கிறதால இந்த லாபம் கிடைக்குது. நேரடியா விக்க ஆரம்பிச்சிட்டா இன்னும் கூடுதலா லாபம் கிடைக்கும். அதுக்கு நாங்க வருங்காலத்துல முயற்சி எடுப்போம்’’ என நம்பிக்கையுடன் பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
அருள் : 97100 22570.

பட்டாபிராம் அருகில் அமைந்துள்ள தண்டரை கிராமத்தில் விளையும் கீரைக்கு இப்பகுதியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வெங்கடாபுரம் பகுதியில் விளையும் கீரைக்கு மவுசு கூடுதலாக இருக்கிறது.

 

The post விளைச்சலில் உச்சம் தொடும் வெங்கடாபுரம் காய்கறிகள்! appeared first on Dinakaran.

Read Entire Article