*கூடுதல் விலைக்கு உரம் விற்பதால் விவசாயிகள் வேதனை
விளாத்திகுளம் : விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பருவமழையை எதிர்பார்த்து விதைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாய உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வானம் பார்த்த பூமியான விளாத்திகுளம் பகுதி விவசாயிகள், பருவமழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். கடந்தாண்டு பெய்த அதிகனமழை காரணமாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் உள்ள விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன்கள் பெற்று தங்களது விவசாய நிலங்களை தயார் செய்து மக்காச்சோளம், சோளம், உளுந்து, பாசிப்பயிறு, கம்பு போன்றவற்றை விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் கடைகளில் உரங்களை வாங்குவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் உரக்கடைகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்கள் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு வேலையாட்களுக்கான விவசாயக்கூலி பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தற்போது உரங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.ஒன்றிய அரசின் மானியத்துடன் வழங்கப்படும் உரங்கள் நேரடியாக கடைக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மட்டும் உரம் நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இங்கிருந்து கடைக்கு கொண்டு வருவதற்கு கூடுதல் போக்குவரத்து செலவு ஏற்படுவதால் உரங்களின் விலைகளில் சற்று கூடுதலாக வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்னக மானாவாரி விவசாய சங்க தலைவர் பிரேம்குமார் கூறுகையில், ‘விளாத்திகுளம் தொகுதி விவசாய பொதுமக்கள் பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் உரங்கள் பெறுவது பெரும்பாடாக உள்ளது. கடைகளில் பெறும் டிஏபி மற்றும் யூரியா போன்ற உரங்களுக்கு ஒன்றிய அரசு அதிக மானியம் வழங்க வேண்டியது உள்ளது. இவ்வாறு விவசாய உரங்களுக்கு மானியம் வழங்குவதில் இருந்து ஒன்றிய அரசு தப்பித்துக் கொள்வதற்காக மாற்று உரங்களை முன்னிறுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மாற்று உரங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கட்டாயமாக தள்ளப்படுகின்றனர்.
யூரியா, டிஏபி உரங்களை தவிர்த்த மற்ற உரங்களுக்கான விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதால் கடந்த 2017ம் ஆண்டில் ₹500 வரையில் விற்கப்பட்டு வந்த காம்ப்ளக்ஸ் உரம் தற்போது ₹1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ₹600 வரை விற்கப்பட்டு வந்த பொட்டாஷ் உரம் தற்போது 1,900 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. யூரியா, டிஏபி உரம் தட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் புதுவிதமான உரங்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது, என்றார்.
தற்போது விளாத்திகுளம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கடனுக்கு பெற்றுக்கொள்வதால் அதற்கு பில் வழங்குவதில்லை. மேலும் உரம் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பது தெரிந்து அதனை கண்டு கொள்ளாமல் வாங்கிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நிலத்தை உழுதல், களை எடுத்தல் உள்ளிட்ட விவசாயக்கூலி உயர்ந்துள்ள நிலையில் தற்போது உரங்கள் விலையும் சுமார் 10 முதல் 20 சதவீதம் உயர்த்தி விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
The post விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் விதைகள் விதைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.