சென்னை :கோடை காலம் முடிவுக்கு வருகிறது என்றும் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில்,”கோடை காலம் இன்றுடன் முடிகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தமிழகத்திற்கு இந்த ஆண்டு தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று என்றே சொல்லலாம். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக வெப்ப அலை இல்லை. அது போல் இந்த மே மாதத்தில் சென்னையிலும் வெயிலானது ஒரு நாள் கூட 40 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டவில்லை. இதே நிலைதான் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018, 2004 ஆகிய ஆண்டுகளில் இருந்தது. வெப்பநிலை பொதுவாக இது போன்ற வெப்பநிலை இல்லாமை என்பது மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ இருக்கும். ஆனால் தற்போது மே மத்தியிலேயே இருப்பது இதுதான் முதல் முறை. இதனால் குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே இந்த மாத இறுதியில் அரபிக் கடல், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 10 நாட்களில் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு- மேற்கு பகுதியில் காற்று சுழற்சியானது வடதமிழகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோரங்களில் நெருங்கி வருகிறது. எனவே இனி வரும் நாட்கள் வெப்பமில்லாமல் ஜாலியான நாட்களாக அமையும்.கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகை , மயிலாடுதுறை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. பெங்களூரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் வெப்பமில்லா கோடையை ஜாலியாக கழியுங்கள். அதற்காக சென்னையில் 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவும் என எடுத்துக் கொள்ளக் கூடாது. வழக்கத்தை விட இந்த ஆண்டு மே மாதம் வெப்பநிலை குறைவாக இருக்கும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
The post கோடை காலம் முடிவுக்கு வருகிறது.. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்பு : பிரதீப் ஜான் appeared first on Dinakaran.