
சென்னை,
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள் மற்றும் ஜீ ஸ்டுடியோ ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்க உள்ளன.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆர்யா சார்பட்டா பரம்பரை 2 படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதாவது, தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னர், வருகிற ஆகஸ்ட் மாதம் 'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன.