சென்னை,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
இவர் அவ்வப்போது இசைக்கச்சேரி நடத்துவார். அந்தவகையில், கடந்த 17-ம் தேதி இரவு திருநெல்வேலியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, தனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த இசை கச்சேரிக்காக அறிவிப்பை இளையராஜா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.