யாரும் கிரிக்கெட்டை விட பெரிதாக முடியாது - இந்திய வீரர்களுக்கு யோக்ராஜ் சிங் அறிவுரை

3 hours ago 1

மும்பை,

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. அதற்கு முன்பாக நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் சொதப்பினர். தோல்வி எதிரொலியாக ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. கிரிக்கெட் வாரியத்தின் நெருக்கடியால் நடப்பு ரஞ்சி தொடரில் ரோகித், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட சில முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ள அறிவுரை பின்வருமாறு:- "நீங்கள் எப்போதும் கிரிக்கெட்டை விட பெரியவர்களாக வர முடியாது. விவ் ரிச்சர்ட்ஸ் அல்லது டான் பிராட்மேன் உட்பட யாரும் கிரிக்கெட்டை விட பெரிதாக முடியாது. எனவே வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும்போது நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். நட்சத்திர வீரர்கள் உள்ளூரில் விளையாடும்போது இளம் வீரர்களும் அவர்களுடன் விளையாடி தன்னம்பிக்கையை பெறுவார்கள்.

இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாத சமயங்களில் யுவராஜ் சிங் உள்ளூரில் சென்று ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதே போல இந்திய அணி விளையாடாத சமயங்களிலும் அவர் உள்ளூரில் விளையாடுவார். எனவே ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட அனைவரும் உள்ளூரில் விளையாட வேண்டும். வலைப்பயிற்சியில் எவ்வளவுதான் பயிற்சிகள் எடுத்தாலும் எதுவும் வேலையாது. அனைத்தும் களத்தில்தான் நடக்கும்" என்று கூறினார்.

Read Entire Article