ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி தி.மு.க.வில் இணைந்தார்

3 hours ago 1

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேர்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த சூழலில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். பின்னர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்த செந்தில் முருகன் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்துஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன், தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். 

Read Entire Article