
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு சத்துணவு விநியோகம் செய்யும் வகையில் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மனைவி சரிதா (வயது 40) என்பவர் பொறுப்பாளராகவும், செம்பளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாவாடைராயன் மனைவி ஜெயக்கொடி(43), என்பவர் சமையல் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென கியாஸ் தீர்ந்துவிட்டது. இதனால் மற்றொரு சிலிண்டரை எடுத்து கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது சிலிண்டரின் ட்யூப்பில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் வந்தது. இதனை அறிந்த சமையல் உதவியாளர் ஜெயக்கொடி, உடன் அங்கிருந்த பொறுப்பாளர் சரிதாவிடமும், தனது மகனான செந்தமிழ் செல்வன் (24), என்பவரிடமும் கூறியுள்ளார்.
அப்போது பொறுப்பாளர் சரிதாவும் செந்தமிழ் செல்வனும் ஓடிச்சென்று சமையலறைக்குள் புகுந்து சாக்கை எடுத்து தண்ணீரில் நனைத்து டீயூப் மீது போட முயன்றனர். அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சமையலறையில் இருந்த சரிதா, ஜெயக்கொடி. செந்தமிழ்செல்வன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த உடைகள் மீது தீப்பிடித்து எரிந்தது. உடன் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.
தொடர்ந்து அவர்களை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூட சமையலறையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.