விருத்தாசலம், பிப். 24: தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோடு அண்ணா நகர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் செல்வகுமார், சேகர். அதே தெருவில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரனின் சகோதரி தெய்வநாயகி. இவரது மகன் பழனி முத்து(37), கூலி தொழிலாளி.
செல்வகுமாருக்கும், சேகருக்கும் சொத்து பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதை பார்த்த தெய்வநாயகியின் மகன் முத்து, அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டுள்ளார். அப்போது எங்கள் பிரச்னையில் வந்து சமாதானம் செய்ய நீ யார் என கேட்டு முத்துவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பிரச்னையை அறிந்த செல்வகுமாரின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர், அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தியதுடன் முத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதை தொடர்ந்து முத்துவும் அவருடைய தாய் தெய்வநாயகியும் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு சுமார் ஒரு மணி அளவில் வீட்டின் வெளியே வெடி சத்தம் கேட்டதையடுத்து முத்து மற்றும் தெய்வநாயகி வெளியே வந்து பார்த்தபோது பாட்டில் ஒன்று உடைந்து கிடந்ததும், அருகில் இருந்த துணிமணிகள் எரிந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அதனை என்ன என்று பார்த்தபோது பாட்டிலில் பெட்ரோல் அடைத்து அதில் திரி போட்டு அதில் நெருப்பை கொளுத்தி பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
அதில், நேற்று முன்தினம் முத்துவுக்கும், ஆகாஷ் என்பவருக்கும் இடையே நடந்த பிரச்னையின் காரணமாக ஆகாஷ் என்பவர்தான் பெட்ரோல் குண்டு தயார் செய்து வீசியதாக தெரியவந்தது. இதையடுத்து தெய்வநாயகியிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஆகாஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post விருத்தாசலத்தில் பரபரப்பு: தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு appeared first on Dinakaran.