*போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நித்திரவிளை ; நித்திரவிளை அருகே இரையுமன்துறையில் மீன்பிடி துறைமுக விரிவாக்கம் மற்றும் அலை தடுப்புச்சுவர் அமைக்க தினசரி நூற்றுக்கும் அதிகமான டாரஸ் லாரிகளில் பாறாங்கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகள் வந்து செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் விரிவிளை முதல் கணபதியான்கடவு பாலம் வரையில் சாலையின் அகலம் குறைவாக உள்ளதால், போக்குவரத்து பிரச்னை ஏற்படாமல் இருக்க பாறாங்கல் ஏற்றி வரும் போது புதுக்கடையிலிருந்து கணபதியான்கடவு பாலம் வழியாக இரயுமன்துறை செல்லுமாறும், திரும்ப பாறாங்கல் ஏற்ற செல்லும் போது விரிவிளையிலிருந்து மங்காடு வழியாக செல்ல வேண்டும் என்றும் டாரஸ் லாரி ஓட்டுனர்களுக்கு, ஒப்பந்த நிறுவனம் மற்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளையில் விரிவிளை முதல் மங்காடு வரையுள்ள சாலையின் அகலம் மூன்றரை மீட்டர் ஆகும். இந்த சாலையின் இருபுறமும் சேதமடைந்து தற்போது மூன்று மீட்டர் அகலத்தில் தான் காட்சியளிக்கிறது. இதனால் பைக்கில் செல்பவர்கள் எதிரே ஒரு கனரக வாகனம் வந்தால் இடம் விட்டு செல்வதே பெரும் பாடாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாறாங்கல் ஏற்ற செல்லும் கனரக டாரஸ் லாரிகளை இந்த சாலை வழியாக திருப்பி விட்டுள்ளனர்.
இந்த குறுகிய சாலையில் டாரஸ் லாரி டிரைவர்கள் சாலையோரம் நடந்து செல்பவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும் உயிர் பயம் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக ஓட்டி செல்கின்றனர். மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு சரியான முறையில் வழி விடாமல் லாரிகளை இயக்குகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே நித்திரவிளை போலீசார் மற்றும் துறைமுக விரிவாக்க கட்டுமான நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு விரிவிளை – மங்காடு சாலையில் செல்லும் டாரஸ் டிப்பர் லாரிகள் வேகம் குறைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post விரிவிளை – மங்காடு சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் அதிவேக டாரஸ் லாரிகள் appeared first on Dinakaran.