
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - படிக்கல் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தது. 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. படிக்கல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அடுத்து வந்த கேப்டன் படிதாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி வலுவான நிலையை எட்டியது. சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகினார். இருவரையும் ஒரே ஓவரில் ஹர்திக் வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா (40 ரன்கள்) அதிரடியாக விளையாடி பெங்களூரு அணி 200 ரன்களை கடக்க உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்துள்ளது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை களமிறங்க உள்ளது.