விராட் கோலியின் கெரியருக்கு அது அற்புதமான முடிவாக இருக்கும் - ஏபி டி வில்லியர்ஸ்

2 days ago 2

கேப்டவுன்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.

இந்த தொடருக்கு முன்னதாக பெரும் விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, தற்போது முக்கியமான தருணத்தில் மீண்டும் பார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து அசத்திய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இதன் மூலம் இந்த உலகிற்கு மீண்டும் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்துள்ளார். இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக விராட் கோலி பார்முக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது விராட் கோலியின் அற்புதமான கெரியருக்கு நல்ல முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தனது கச்சிதமான ஆட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து விராட் கோலி புதிய ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் எப்போதும் அந்த திறனை தனக்குள் கொண்டுள்ளார். பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது ஏற்கனவே கொண்டிருக்கும் அவரது அற்புதமான கெரியருக்கு சிறந்த முடிவாக இருக்கும். கடந்த வருடம் அபாரமாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனை கிடையாது. அவர் அணியில் தமக்கான வேலையை செய்தார்.

டெல்லி அணியின் ஜேக் பிரேசர் போன்ற ஒருவர் அதிரடியாக விளையாடும் வரை விராட் கோலி நங்கூரமாக பொறுப்பாக விளையாட வேண்டியவர். கடந்த வருடம் அப்படியே விளையாடிய அவர் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முக்கிய பங்காற்றினார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனங்கள் இருப்பது வேடிக்கையானது.

தனது அணிக்கு தேவையான நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதையே விராட் கோலி செய்தார். அவை அனைத்தும் சூழ்நிலையைப் பொறுத்து விளையாடுவதைப் பற்றியதாகும். அதே சமயம் மறுபுறம் வேறு பேட்ஸ்மேன் அதைச் செய்தால் அவர் சுதந்திரமாக விளையாடுவதையும் நீங்கள் பார்க்க முடியும். எனவே அணிக்காக தேவைப்படும்போது நங்கூரமாக விளையாடுவதே விராட் கோலியின் இயற்கையான ஆட்டமாகும்" என்று கூறினார்.


Read Entire Article