'பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம்' - கொல்கத்தா மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாய் பேட்டி

11 hours ago 2

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ந்தேதி, 31 வயது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா செசன்ஸ் கோர்ட்டு கடந்த ஜனவரி 20-ந்தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க உத்தரவிடக்கோரி சி.பி.ஐ. மற்றும் மேற்கு வங்காள மாநில அரசு சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரி மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொல்கத்தா மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாய் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எங்கள் மகள் பெரிய கனவு கண்டாள். அவள் இப்படி ஒரு மரணத்தை அடைய வேண்டியிருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவள் எங்களை விட்டுப் பிரிந்து ஏழு மாதங்கள் ஆகின்றன, ஆனால் நீதி எங்கே? எங்களிடம் அவளது இறப்புச் சான்றிதழ் கூட இல்லை.

ஒரு பெண் மருத்துவருக்கு தனது பணியிடத்தில் கூட பாதுகாப்பு இல்லையென்றால், வேறு எங்கு அவருக்கு பாதுகாப்பு இருக்கும்? நான் பிரதமரை சந்தித்து, எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். 

Read Entire Article