திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

12 hours ago 2

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பால்குண மாதத்தில் சுத்த ஏகாதசி அன்று தொடங்கும் தெப்போற்சவம் பால்குண பவுர்ணமி நாளில் முடிவடைகிறது. தினமும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிதக்கும் அலங்கரிக்கப்பட்ட மின்னொலியில் ஜொலிக்கும் தெப்பத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

தெப்போற்சவத்தின் முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஸ்ரீவாருவின் ராமாவதாரத்தில் தொடங்குகிறது. சீதா, ராமர், லட்சுமணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 2-வது நாள் கிருஷ்ணாவதாரத்தில் ராதா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

அதே நேரத்தில் கடைசி 3 நாட்களும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி முறையே 3, 5 மற்றும் 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தெப்போற்சவத்தால் கோவிலில் இன்று, நாளை (திங்கட்கிழமை) சஹஸ்ர தீபலங்கார சேவை, 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது, என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவில் அருகில் உள்ள புண்ணியத் தீர்த்தமான ஸ்ரீவாரி புஷ்கரணியில் தெப்பத்தேர் கட்டும் பணி முடிந்து தெப்போற்சவம் நடத்த தயாராக உள்ளது. மேலும் பக்தர்கள் யாரேனும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் தவறி விழுந்து விட்டால் அவர்களை மீட்கும் பணிக்காக ஏராளமான நீச்சல் வீரர்களும் தயாராக உள்ளனர். மறுபுறம், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article