விராட் கோலிக்கு ஏன் தண்டனை வழங்கவில்லை - ஆகாஷ் சோப்ரா கேள்வி

4 weeks ago 8

புதுடெல்லி,

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முதல் பாதியைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நிறைய கேப்டன்கள் மெதுவாக பந்து வீசியதற்காக 12 லட்சம் அபராதத்தை சந்தித்து வருகின்றனர். அது போக விதிமுறைகளை மீறும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரை பி.சி.சி.ஐ அதிரடியான அபராதத்தை விதித்து வருகிறது.

குறிப்பாக லக்னோ இளம் வீரர் திக்வேஷ் சிங் விக்கெட்டை எடுத்து அதை எழுதுவது போல் கொண்டாடினார். அதற்காக முதல் முறை 25 சதவீதம் அபராதம் மற்றும் 1 கருப்புப் புள்ளியை தண்டனையாக பெற்ற அவருக்கு 2வது முறை பி.சி.சி.ஐ 50 சதவீதம் இரண்டு கருப்புப் புள்ளிகளை தண்டனையாக வழங்கியது.

அந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றியை கொண்டாடிய பெங்களூரு வீரர் விராட் கோலி, பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து வேண்டுமென்றே வெறுப்பேற்றும் வகையில் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா? என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பாக திக்வேஷ் முதல் பயிற்சியாளர்கள் வரை அனைவருக்கும் அபராதம் போட்ட பி.சி.சி.ஐ-க்கு விராட் கோலி மட்டும் விதிவிலக்கா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

திக்வேஷ் ரதி நோட்புக் செலிபிரேஷன் போல கொண்டாடினார். அதனால் ஒன்றுக்கு 2 முறை அபராதத்தை சந்தித்த அவர் மூன்றாவது முறை பயந்துக்கொண்டு தரையில் எழுதினார். ஏனெனில், மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கும் அவர் அதை அபராதமாக செலுத்தினால் ஒன்றும் கிடைக்காது.

பஞ்சாப் - பெங்களூரு போட்டியின் முடிவில் விராட் கோலி கொண்டாடியது முற்றிலும் ஆக்ரோஷமான கொண்டாட்டமாகும். ஆனால், யாருமே விராட் கோலியிடம் எதுவும் சொல்லவில்லை. திக்வேஷ் நோட்புக் போல கொண்டாடிய போது மட்டும் அபராதம் விதித்தீர்கள். அதே போல ஒருமுறை தோனி விதிமுறையை மீறி களத்திற்குள் சென்று நடுவர்களிடம் வாதிட்டார்.

அதற்காக அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அது குறைவு என்றாலும் தோனி மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இங்கே விராட் கோலி மேலே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article