
திருப்பூர்,
திருப்பூர் சி.டி.சி. கார்னர் பகுதியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மையத்தடுப்பு உயரம் குறைவால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மிகவும் பரபரப்பான இந்த சாலையில் உயரம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் சாலையின் மைய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் இரவு நேரங்களில் தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் ரிப்ளெக்டர் விளக்குகள் அமைக்காததால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் மையத்தடுப்பின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த மையத்தடுப்பை அகற்றிவிட்டு 3 அடி உயரத்தில் வைக்கப்படும் சாலை தடுப்பு கற்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்திந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது சி.டி.சி. கார்னர் பகுதியில் சாலையின் நடுவே தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் அமைத்து ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாருக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.