விராட் கோலி வேண்டுமென்றே என் மீது மோதவில்லை - கான்ஸ்டாஸ் விளக்கம்

6 months ago 15

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் போராடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.

இருப்பினும் அந்த இடத்தில் விராட் கோலி வேண்டுமென்றே அவர் மீது மோதியதாக அறிவித்துள்ள ஐ.சி.சி. அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், ஒரு கருப்பு புள்ளி வழங்கியும் தண்டனை விதித்தது.

இந்நிலையில் விராட் கோலி எதிர்பாராத விதமாக தம் மீது மோதியதாக சாம் கான்ஸ்டஸ் கூறியுள்ளார். மாறாக விராட் கோலி வேண்டுமென்றே தன் மீது மோதவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றைய ஆட்ட முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- "நான் என்னுடைய கையுறைகளை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவர் எதிர்பாராத விதமாக என் மீது மோதினார். கிரிக்கெட்டில் பரபரப்பான சூழ்நிலையில் அவ்வாறு நடக்கும். கையுறைகளை மாட்டிக் கொண்டிருந்த நான் அவ்வாறு நடந்ததை உணரவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இவ்வாறு நடப்பது சகஜம்" என்று கூறினார்.

Read Entire Article