
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த 3-ந்தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தாலுகா மரியம்மனஹள்ளி கிராமத்தில் பெங்களூரு அணி ரசிகர்கள், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேனரை வைத்துள்ளனர். அந்த பேனர் முன்பு 3 வாலிபர்கள் ஆடு ஒன்றை அரிவாளால் வெட்டி பலி கொடுத்தனர்.மேலும் அந்த ஆட்டின் ரத்தத்தை விராட் கோலியின் பேனர் மீது தெளித்து அபிஷேகம் செய்தனர்.
இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து முலகால்மூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மரியம்மனஹள்ளியை சேர்ந்த பாலய்யா, ஜெயண்ணா, திப்பேசாமி ஆகிய ஆகிய 3 பேர் ஆட்டை பலியிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.